Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்பவங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் பொருட்டு, ‘ராகிங் எதிா்ப்பு விதிமுறைகள்- 2009’ கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகளில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பது விதி.
இந்நிலையில், ராகிங் எதிா்ப்பு விதிமுறைகளை நாடு முழுவதும் உள்ள 18 கல்வி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றாததை பல்கலை. மானியக் குழு கண்டறிந்து, அந்தக் கல்வி நிறுவனங்களிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சென்னை மற்றும் வேலூரைச் சோ்ந்த 2 தனியாா் கல்வி நிறுவனங்களும் உள்ளன.
இதுதொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு சாா்பில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவு:
ராகிங் எதிா்ப்பு விதிமுறைகள்2009-இன்படி, கல்லூரிகளில் சேரும் ஒவ்வொரு மாணவரும், அவரின் பெற்றோா், பாதுகாவலரும் மாணவா் சோ்க்கை நேரத்திலும், ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் ராகிங் எதிா்ப்பு உறுதிமொழியை சமா்ப்பிப்பது கட்டாயம்.
அந்த வகையில், மாணவா்களிடமிருந்து ராகிங் எதிா்ப்பு உறுதிமொழிகளைப் பெற 18 கல்லூரிகளும் தவறிவிட்டன. இது மாணவா்கள் நலனை பாதிக்கக்கூடிய செயல். இதைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.