ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்
``ராஜ்கிரண் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்தப்போ கை நடுங்குச்சு!" - பிளாஷ்பேக் சொல்லும் கஸ்தூரி ராஜா!
மில்லேனியல்ஸ்க்கு 'என் ராசாவின் மனசிலே', 90ஸ் கிட்ஸ்க்கு 'துள்ளுவதோ இளமை' போன்ற படங்களுக்காக பெயர் பெற்றவர் கஸ்தூரி ராஜா. கிராமத்துக் காவியங்களாக இருக்கும் பெரும்பாலான இவரின் படங்கள், அவ்வகைக்கே ஓர் பென்ச்மார்க்.
விசுவின் உதவி இயக்குநராக ஆரம்பித்து, பிறகு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இவர் சாதித்தது அதிகம். என்றும் தனது படைப்புகள் மூலம் புத்துணர்ச்சியூட்டும் இவரிடம் பேசினோம்....
'இட்லி கடை' படம் பார்த்தபோது நிஜ வாழ்க்கை சம்பவம் போல் இருந்தது... நிஜமாகவே நடந்தது தானா? இல்லை சில சம்பவங்களின் தொகுப்பா?
சம்பவங்களின் தொகுப்புதான். நிஜ வாழ்க்கை சம்பவம் எனக் கூற முடியாது. ஆனால் அந்த மிக்ஸ் இல்லாமல் படம் எடுக்க முடியாது. இப்போ 'என் ராசாவின் மனசிலே' எடுத்துக்கிட்டீங்கனா, அதில் ராஜ்கிரணின் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் என் அப்பாவோட ஆட்டிடியூடுதான். அந்த எலும்பு கடிப்பது முதற்கொண்டு என் அப்பாவைப் பார்த்து நான் வச்சதுதான். இப்படி வாழ்க்கையின் நிகழ்வுகள் நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படித்தான் தனுஷுக்கு சங்கராபுரம். சிறு வயதில் அவர்களுக்கு அம்மா ஊர் சுற்றுலாத்தலம் போல், இன்றும் அதே ஈர்ப்போடு இருக்கிறார். கிராமிய மண்ணை ஒருத்தன் விரும்பிவிட்டாலே, உயிருள்ளவரை அது இருக்கும்.

கிராமத்தின் எதார்த்தத்தைக் காட்டும் ராஜ்கிரணின் கதாபாத்திரம் கஸ்தூரி ராஜாவின் சாயல் கொண்டதா?
அந்தக் கதாபாத்திரம் மிகவும் அடக்கமான ஆளு, ஆனா நான் கொஞ்சம் அடாவடியான ஆளு. சண்டை சச்சரவு போடும் ரவுடி அல்ல, ஆனால் ஒரு இடத்தில் என்னை ஒக்கார வைக்க முடியாது. அந்தக் கதாபாத்திரம் போல்தான் ராஜ்கிரணும். எதற்குமே பதட்டப்பட மாட்டாரு.
உங்களின் முதல் கதாநாயகனும் அவர்தான்.... 30 வருடங்களுக்கு பின்னர் உங்கள் மகன் தனுஷின் முதல் கதாநாயகனும் அவரே. அதே மனிதர், அதே அன்பு. இதை எப்படிப் பார்க்குறீங்க?
இது ஒரு அதிசயம்தான். உறுதித்தன்மை இல்லாத வாழ்க்கைதானே சினிமா என்பது. ஒரு நாள் என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு "உங்கள் கதாநாயகனுக்கு அட்வான்ஸ் குடுக்கப் போலாம் வாங்க," என்று அழைத்துச் செல்லும்போதுதான் ராஜ்கிரண் கதாநாயகன் என்பதையும், அவர் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பதையும் தனுஷ் அப்போதான் எனக்குச் சொல்றாரு. தமிழ் சினிமாவிலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நபர் அவர். அன்று எனக்கு ஆயிரம் ரூபாய் செக்கு குடுத்து பட வாய்ப்பு தந்த ராஜ்கிரணுக்கு இன்று நான் அட்வான்ஸ் குடுத்தப்போ என் கை எல்லாம் நடுங்கிச்சு. அவரிடம் நான் தான் ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.

இந்தப் படத்திற்குப் பின்னர், நடிகர் தனுஷையும் இயக்குநர் தனுஷையும் நீங்க எப்படிப் பாக்குறீங்க?
இயக்குநராகத்தான் அவர் என்னை ஈர்த்தார். நடிப்பில் எவ்வளவோ பார்த்திருக்கிறோம், 'அசுரன்' விடவா வேறு ஏதும் வர முடியும்? இன்று இயக்குநராக அவர் மேடையேறிப் பேசும்போது, "இந்தச் சின்னப் பையன் எப்படித் தெரிஞ்சு வச்சிருக்கான் பாரேன்" என்று பெருமிதம்தான் கொண்டேன். "நம்ம முன்னோர்களின் மூச்சுக் காற்றுதான் இப்போ குலதெய்வங்களாக நிக்குது, அதனால் உங்கள் பிள்ளைகளைக் குலதெய்வ கோயில்களுக்கு கூட்டிட்டுப் போய்க் காமிச்சு வளருங்க," என்று அவர் கூறும்போது மலைச்சுப் போய் நின்னேன்.
படத்தில் மற்றொரு ஸ்பெஷல் ஆன கதாபாத்திரமா தனுஷ் அவர்களின் பாட்டி நடிச்சிருக்காங்க, ஒரு முக்கியமான மெசேஜும் கொண்டு வந்திருக்காங்க. அவரை நடிக்க வைத்த முடிவு பற்றியும், அந்த அனுபவம் பற்றியும் சொல்லுங்க.
அது பிளான் ஆக இருக்காது. படத்தில் வரும் வீடு பாட்டி வீடுதான், அங்க அவங்களைப் பார்த்திருப்பாரு, அப்படியே படத்துல நடிக்க வச்சிருப்பாரு. "இந்த வீட்ல படம் எடுத்துட்டா, அது எப்படி ஓடுதுனு பாரு!"னு அவங்க சொன்னாங்க போல. இதேபோல்தான் என் பெயர் மாற்றி நான் இயக்குநர் ஆன சமயத்தில் தனுஷ் பாட்டி, என்னோட மாமியார், திருநீர் மந்திரிச்சு அருள்வாக்கு சொன்னாங்க. அது ஒரு விதத்துல தெய்வத்தோட சொல் தானே! நல்லதோ கெட்டதோ அது பெரியவங்களோட வாக்கு, அதை நம்ம மதிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?

நீங்கள் பெயர் மாற்றியது போல் தனுஷும் மாற்றிக்கொண்டாரே, உங்களுக்கு அதில் உடன்பாடு இருந்ததா?
எப்படியும் நாங்களே மாற்றுவதாகத்தான் இருந்தோம். அவர்தான் 'தனுஷ்' என்ற பெயரைத் தேர்வு செய்தார். அந்தப் பெயரின் அர்த்தத்தை நடிகர் நெப்போலியன் தான் எனக்கு சொன்னார். அந்த நேரத்தில் அவர் அறிமுகப் படத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று தவமிருந்த காலம், இதில் பெரிதாக நான் கவனம் செலுத்தவில்லை.
நடிகர் தனுஷ், இயக்குநர் தனுஷ் - உங்களுக்கு பிடித்தவர் யார்?
இரண்டுமே சமம்தான், ஆனால் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் வென்றிருக்கிறார். ஒரு தந்தை தன் மகன் எவ்வளவு வளர்ந்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். அவர் தேசிய விருது வாங்கிய தருணத்தில் "எங்கு பொறந்தோம், இப்போ எங்கு வந்திருக்கிறோம்," என எண்ணி தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது. ஆனால் சற்று நேரத்தில், "இது உனக்கு பத்தாதே, இதையும் விட நீ கெட்டிக்காரன் ஆச்சே," என்றுதான் தோன்றியது.

நடிகர் செல்வராகவன் பற்றி உங்கள் கருத்து அப்போ என்ன?
எதார்த்தம். தனுஷ் மாதிரி அவர் நடிக்க முயற்சி செய்யவில்லை. அந்த இயக்குநர் என்ன சொல்றாரோ அதை அப்படியே செஞ்சு கொடுத்துருவார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பற்றி அனைவருக்கும் தெரியும், சமீப படங்களில் நடிகர் கஸ்தூரி ராஜாவைப் பார்க்கிறோம். அந்தப் பயணம் பற்றிச் சொல்லுங்க.
நான் பாட்டுக்குத் தாங்க இருந்தேன். மீரா கதிரவன் என்று ஒரு இயக்குநர், அவர் பெயர் தமிழரசி என்று ஒரு படம் பண்ணிருக்காரு. அவர் ஒரு நாள் வந்து, "இந்த மாதிரி ஒரு படம் இருக்கு, அதில் இஸ்லாமிய கதாபாத்திரம் ஒன்று இருக்கு. அதை நீங்கதான் பண்ணனும்." என்று சொன்னார். "ஐயா, நமக்கு நடிப்பு வராது. ஹெட்மாஸ்டரைக் கூட்டிட்டு வந்து படம்னு சொன்னா எப்படி? முடியாது"னு நான் சொன்னேன். "ரெண்டாவது, நான் கொஞ்சம் மொரட்டு சுபாவம், உங்களால் என்னை வேலை வாங்க முடியாது, அதனால் விட்டுவிடுங்கள்." எனக்கு நடிப்பில் ஆர்வமே இல்லை. கனவுகள் உண்டு, அதனால்தான் நானும் என் புள்ளைகளும் இங்கு வந்து நிற்கிறோம். அதைவிட முக்கியமான பங்கு என் புள்ளைகளின் அம்மாவிற்குதான். அவரின் வளர்ப்பினால்தான் இவர்கள் இந்த வயசிலும் இப்படி இருக்கிறார்கள்.