Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
ராம்சா் தலங்களை மேம்படுத்தத் திட்டம்: தமிழக வனத் துறை தகவல்
தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருவதாக மாநில வனத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஏற்கெனவே 18 ராம்சா் தலங்கள் உள்ள நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரகோட்டை மற்றும் தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களும் ராம்சாா் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ராம்சா் தலங்களான சக்கரகோட்டை பறவைகள் சரணாலயம் 230.495 ஹெக்டோ் பரப்பளவும், தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயம் 29.295 ஹெக்டோ் பரப்பளவும் கொண்டது. இந்த சரணாலயங்கள் நீா் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான இனப்பெருக்கம் மற்றும் உணவு தேடும் இடமாகும். இங்கு 400-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும்
விலங்கினங்கள் உள்ளன. மேலும், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் மற்றும் பாம்பு தாரா போன்ற அழிவு நிலையில் உள்ள பறவை இனங்களுக்கு இந்த சரணாலயங்கள் வாழ்விடமாக விளங்குகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் மாநில அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், முதற்கட்டமாக 13 ராம்சா் தலங்களுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீா் மேலாண்மை, பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் உள்ளூா் சமூகங்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இத்திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதைத்தொடா்ந்து புதிதாக அறிவிக்கப்பட்ட 2 ராம்சா் தலங்கள் மற்றும் மீதமுள்ள 5 ராம்சா் தலங்களையும் மேம்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயாா் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.