``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- டெலிபோன் ராஜ் பேட்டி
`சுழல்' வெப் சீரிஸின் முதலாவது சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதில் பெர்னாடெஸ் என்ற கதாபாத்திரத்தில் மீனவர்களின் தலைவனாக நியாயத்தின் பக்கம் நின்று வழிநடுத்திச் செல்பாராக நல்லதொரு நடிப்பைக் கொடுத்து மனதில் பதிகிறார் நடிகர் டெலிபோன் ராஜ். காமெடி நடிகர்கள் வில்லனாகவும், குணசித்தர கதாபாத்திரத்திலும் மிரட்டுவதுதான் தற்போதைய டிரெண்ட். அந்த டிரெண்டில் இதோ அடுத்ததாக வந்திருக்கிறார் டெலிபோன் ராஜ். இவரை தொடர்பு கொண்டுப் பேசினோம்.
சீரிஸ்ல காமெடியனாக இல்லாமல் குணசித்தர கதாபாத்திரத்துல நடிச்சிருக்கீங்க! இந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன வரவேற்பு கிடைக்குது?
எல்லோருமே என்னை வாழ்த்துறாங்க. சந்தோஷமாக இருக்கு. இப்படியான பாராட்டுக்குப் பிறகு `என்னை நடிகனாக மாற்றியதற்கு நன்றி'னு இயக்குநர் பிரம்மாவுக்கு மெசேஜ்ஜும் போட்டேன். சொல்லப்போனால், ஒரு டீ கடையில இருந்துதான் எனக்கு இந்த சீரிஸோட வாய்ப்புக் கிடைச்சது. அங்க இயக்குநர் பிரம்மா என்கிட்ட இந்த மாதிரி சீரிஸ்ல நடிக்கிறீங்களான்னு கேட்டாரு. அப்புறம் ஒரு நாள் அவங்க அலுவலகத்துக்கு வரச் சொல்லி என்னுடைய பெர்னாடெஸ் கதாபாத்திரம் பற்றி சொன்னாங்க. இயக்குநர்கள் புஷ்கர் சாரும் காயத்ரி மேமும் என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும்னு சில விஷயங்களை விளக்கினாங்க. முக்கியமாக என்னை படப்பிடிப்பு தளத்துல நல்லா பார்த்துகிட்டாங்க. இவ்வளவு பெரிய கதாபாத்திரம் எனக்குக் கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. `அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' காமெடி என்னை நடிகனாக பரிச்சயமாக்குச்சு. இப்போ `சுழல் 2' என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வச்சிருக்குனு சொல்லலாம்.

உங்களை சமீபத்திய படங்கள்ல காமெடி அல்லாத சீரியஸ் கதாபாத்திரங்கள்ல அதிகமாக பார்க்க முடியுது, இப்போ உங்களுக்கு எப்படியான கதாபாத்திரங்களுக்கு அழைப்பு வருது?
இப்போ நான் `கேங்கர்ஸ்', `மாரீசன்' மாதிரியான பெரிய படங்கள்ல காமெடி கதாபாத்திரத்துலதான் நடிச்சிருக்கேன். இப்போ ஒரு படம் பண்ணியிருக்கேன். அதுல ஒரு சீரியஸ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். என் நண்பர்களெல்லாம் `என்னங்க அழுக வைக்கிற மாதிரியான கேரக்டராக இருக்கு'ன்னு அதைப் பற்றி சொன்னாங்க. இதையெல்லாம் தாண்டி சில படங்கள்ல வில்லன் கதாபாத்திரத்துக்கும் இப்போ கூப்பிடுறாங்க. எப்படியோ தொடர்ந்து படங்கள் வாய்ப்பு வந்தா போதும் எனக்கு! நடிப்புக்காக என் வயித்துல நாலரை கிலோ அறுத்து எடுக்கிறதுக்கு ஆப்ரேஷன் பண்ணியிருக்கேன், என் பற்களை சீர்படுத்தியிருக்கேன். அந்தச் சமயத்துல என் குடும்பத்தைக்கூட கவனிக்காமல் இத்தனையும் நான் நடிப்புக்காகத்தான் பண்ணினேன்.
வடிவேலுகூட இப்போ `கேங்கர்ஸ்', `மாரீசன்'னு அடுத்தடுத்து இரண்டு படங்கள் பண்ணியிருக்கீங்க! இப்போ சமீபத்திய பேட்டியில அவர்கூட இதுவரைக்கும் இரண்டு முறைதான் புகைப்படம் எடுத்திருக்கேன்னு சொல்லியிருந்தீங்களே...
வடிவேலு அண்ணன்கூட கடைசியா `நாய் சேகர்' படத்துல நடிச்சிருந்தேன். இப்போ ரெண்டு படங்கள் பண்ணியிருக்கேன். எனக்கும் புகைப்படங்கள் எடுத்துக்க ஆசைதான். ஆனால், நம்ம புகைப்படம் எடுத்துக்கலாம்னு கேட்கும்போது அவங்க எதாவது ஒரு வேலையில அதை மறுத்துடுவாங்களோன்னு ஒரு எண்ணம்தான் எனக்கு! மத்தபடி எனக்கும் ஆசைதான். சொல்லப்போனால், விஜய் சாரே என்னை சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு பேசினாரு. அவராக என்னைக் கூப்பிட்டு `எப்படி கதாபாத்திரமாகவே மாறிடுறீங்க'ன்னு பேசினாரு. அந்த தருணத்துலையும் அதே எண்ணத்துனாலதான் அவர்கிட்ட புகைப்படம் எடுத்துக்கல.

சோசியல் மீடியா பிரபலங்களுக்கு இப்போ சினிமா துறையில முன்னுரிமை கொடுக்கப்படுதுனு துணை நடிகர்கள் சிலர் பேசிட்டு வர்றாங்க, இந்த விஷயத்துல உங்களோட பார்வை என்ன?
அது உண்மைதான். சமூக வலைதளங்கள்ல கெட்ட வார்த்தை பேசி ரீல்ஸ் போடுறவங்களுக்கு சினிமா உலகம் மரியாதை கொடுக்குது. அவங்கள்ல சிலருக்கு நடிப்பும் வராது. அவங்களைத் தொடர்ந்து சினிமாவுல நடிக்க வைக்கிறாங்க. சமீபத்துல நான் ஒரு நிகழ்வுக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்வுல ஒரு சமூக வலைதளப் பிரபலம் வர்றதுனாலதான் ஸ்பான்சர் கிடைச்சதாகச் சொன்னாங்க. அப்படியானவங்களுக்கு தொடர்ந்து சினிமாவுல வாய்ப்பு வருது. 63 வயசுல குடும்பத்தை பார்க்காமல் நடிப்புக்காக இவ்வளவு விஷயங்களை பண்ற எனக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கல.