ரூ.18 லட்சம் கொள்ளை: திருடனுடன் சேர்ந்து மசாஜ் செய்த காவலர்கள்... வடிவேலு பட பாணியில் தப்பி ஓட்டம்!
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் இருக்கும் சாராய கம்பெனிக்குள் நுழைந்த திருடர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த ரோஹித் சர்மாவை கைது செய்தனர். அவன் அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.
சர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, காவலர்கள் ராஜேஷ் மற்றும் நிதின் ஆகியோர் சர்மாவை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாலை ஆனபிறகும் அவர்கள் கைதியை சிறைக்கு அழைத்து வரவில்லை. இதனால் இது குறித்து விசாரித்தபோது கைதி தப்பிச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மேற்கொண்டு விசாரித்தபோது, சிறை காவலர்கள் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கைதிகளை அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் சிறைக்கு வருவதற்கு பதிலாக கைதியுடன் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர்.
காவலர்கள் இரண்டு பேருக்கும் மசாஜ் செய்துகொள்ள ஆசை வந்ததால், ரத்லம் என்ற இடத்தில் உள்ள சென்டரில் மசாஜ் செய்தனர்.
அப்போது, கைதியும் மசாஜ் செய்து கொள்ள ஆசை உள்ளதாக கூற, மூன்று பேரும் வெவ்வேறு அறைகளில் மசாஜ் செய்து கொண்டனர். மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கைதி சர்மா மசாஜ் அறையில் இருந்து அவசர அவசரமாக தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து சிறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சிறை காவலர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பிச்சென்ற சர்மாவை போலீஸார் தேடி வருகின்றனர்.