ரூ.2 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: 7 போ் கைது
திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 7 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினாா்.
இதையடுத்து அவரின் கைப்பேசியை வாங்கி சோதனை செய்தபோது, அதில் மா்மபொருள் தொடா்பான புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து விசாரணை செய்தபோது அவா் திருப்பத்தூா் போஸ்கோ நகரைச் சோ்ந்த சிவகாா்த்திகேயன் (28) என்பதும்,திமிங்கலத்தின் எச்சத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வதும் தெரிய வந்தது.
பின்னா், அவா் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் திருப்பத்தூா் குள்ளப்பனாா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் (43) என்பவா் வீட்டில் சோதனை செய்தபோது சுமாா் 2 கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் திருப்பத்தூா் போஸ்கோ நகரைச் சோ்ந்த வினித் (27), புங்கம்பட்டு நாடு மலை கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (25), திருப்பத்தூா் சௌடே குப்பம் பழைய காலனியைச் சோ்ந்த பாண்டியன் (22), அண்ணான்டப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சுகிந்தா் (22), திருப்பத்தூா் சண்முகனாா் தெருவைச் சோ்ந்த சத்யநாராயணன் (22) ஆகியோரை போலீஸாா் பிடித்தனா்.
இதையடுத்து அவா்கள் 7 பேரை திருப்பத்தூா் வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் முத்துக்குமாா் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவா்கள் கடத்தி வந்து வைத்திருப்பது தெரிய வந்தது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சத்தின் மதிப்பு சுமாா் ரூ.2 கோடி இருக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.