மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 3 | தொடர்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
லாஃப்ராவின் தலைமையில் இரண்டாவது மீட்டிங் துவங்கியது.
ஆனந்த் வருவது கொஞ்சம் தாமதமாகி இருந்தது.
அந்த பிகாரி பையன் மூலம், இஞ்சி டீயும் சுட சுட வெங்காய சம்சாவும் அனைவருக்கும் இன்ஸ்பெக்டர் அபி ஏற்பாடு செய்திருந்தாள்.
“அச்சா ஹை பாயி. தன்யவாத்” என்றாள் சம்சாவை ஒரு கடி கடித்தவாறே லாஃப்ரா அவனிடம். மேலும் தொடர்ந்து, ”கியா நாம் ஹை தும்ஹாரா?” என்றாள்.
லாஃப்ராவிற்கு அந்த பிகாரி இந்த கேசை முடிக்க உதவுவான் என்று உள்ளுணர்ச்சி சொல்லிக் கொண்டே இருந்தது.
“அமர்சிங் மேடம் என் பெயர்” என்றான் அந்த பிகாரி சுத்த தமிழில்.
லாஃப்ரா தமிழுக்கு தாவினாள்,” எந்த ஊர் பிஹாரில் அமர்?”
”கத்திஹார் பக்கத்தில் மேடம்” என்று பதில் அளித்தான் அமர்.
”ரூபா எப்படி அமர்?” என்று வினவினாள் லாஃப்ரா.
“மேம் சாப் ரொம்ப நல்லவங்க மேடம்.”
கருணாகரனுக்கு மொபைல் அழைப்பு வந்தது.”ஒரு நிமிடம் மன்னியுங்கள்” என்று மன்னிப்பு வாங்கி வெளியே சென்றான் கருணா.
கருணா திரும்பி உள்ளே வந்தவுடன் லாஃப்ரா, ”குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. வெளியில் காத்திரு. நான் கூப்பிட்ட பின் உள்ளே வா” என்று சொல்லி அமர்சிங்கை வெளியில் அனுப்பினாள்.
அமர்சிங் வெளியில் சென்றவுடன் ஏதோ கூற வந்த கருணாவை ஒரு நிமிடம் காத்திருக்க சொன்ன லாஃப்ரா, குளிரூட்டியை ஸ்விட்ச் ஆன் செய்து அறையின் கதவை மூடிவிட்டாள்.
அபி இரண்டாவது வெங்காய சம்சாவை கையில் எடுத்திருந்தாள். அவளை நோக்கிய லாஃப்ராவிடம்,”வயிறு காலியாய் இருக்கும் பொழுது மூளை வேலை செய்வதில்லை மேடம்” என்றாள் ஒரு புன்சிரிப்புடன்.
கருணாவை உட்கார சொன்ன லாஃப்ரா, இஞ்சி டீயை கையில் ஏந்தியவாறு,”இப்பொழுது சொல்லுங்கள் கருணா” என்றாள்.
”ரூபாவின் ஆக்டிவா அருகில் அழகூட்டும் பார்லர் வரை சென்றிருக்கிறது. அங்கேயே வெளியில் நின்று கொண்டிருக்கிறது” “உள்ளே சென்ற ரூபா வெளியில் வந்ததாகவே தெரியவில்லை”
“விசாரிப்போம்” என்ற லாஃப்ரா அபியிடம்,”நம் டிப்பார்ட்மெண்ட்டில் இருந்து மேலும் இரண்டு, மூன்று காவலர்களை அழை. மேலும் ரூபாவின் போட்டோவை மொபைலில் எடுத்துக் கொள்” என்றாள்.
ஆனந்த் வந்திருந்தான். விரைப்பாக, காவலர் சல்யூட் ஒன்றை லாஃப்ராவுக்கு அடித்து ஆணைக்கு காத்து நின்றான்.
”உட்கார் ஆனந்த். ஆனியன் சம்சா சாப்பிடு. நல்லா பண்றான், அமர்சிங்” என்று ஆனந்த் பக்கம் சம்சா பிளேட்டை தள்ளினாள் லாஃப்ரா.
ஆனந்த் சோஃபாவின் நுனியில் மரியாதையாக உட்கார்ந்து, ”பரவாயில்லை மேடம்” என்று சொல்லிக் கொண்டே ஆனியன் சம்சா பிளேட்டை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
கமிஷனரிடம் இருந்து அழைப்பு லாஃப்ராவின் மொபைலுக்கு வந்தது. ”சொல்லுங்கள் சார்” என்று லாஃப்ரா சொன்னதும் அறையில் ஒரு நிசப்தம் விழுந்தது.
கமிஷனர் சொன்னதை கேட்ட லாஃப்ரா ஒரு நிமிடம் அமைதி ஆனாள், “பின்னர் பார்த்துக் கொள்ளலாம் சார்” என்று இணைப்பை துண்டித்தாள்.
கருணாவை அழைத்த லாஃப்ரா,”கருணா, அமர்சிங் வெளியில் நிற்பான். அவனைக் கூப்பிட்டு ஒரு தற்காலிக மேஜை, டிஸ்கசனுக்கு ஏற்பாடு செய்” என்றாள்.
அமர்சிங் உள்ளே வந்து தண்ணீர் ஜக்கையும் ஒரு கண்ணாடி கிளாசையும் வைத்து பணிவாக நின்றான்.
கருணா, லாஃப்ரா தன்னிடம் சொன்னதை அமர்சிங்கிடம் சொன்னவுடன், இரண்டே நிமிடத்தில் ஒரு மர மேஜையை அவர்கள் இருந்த அறையில் கொணர்ந்து செட் அப் செய்தான்.
நல்ல வசதியான மர நாற்காலிகள் நான்கையும் அந்த மேஜையை சுற்றி போட்டான்.
“வெளியே நில் அமர்சிங். தேவை என்றால் நான் அழைக்கிறேன்” என்று அவனை வெளியில் அனுப்பினாள் லாஃப்ரா.
அமர்சிங் வெளியில் சென்று கதவு மூடிக்கொண்டதும்,” தாமு சேலத்தில் இருந்து கிளம்பிவிட்டாராம். சாலை மூலம் வருகிறாராம். சேதி போயிருக்கும் என்று நினைக்கிறேன்”
”அபி சைபர் செல்லை தொடர்பு கொண்டு கடைசியாக யாரிடம் இருந்து தாமுவுக்கு அழைப்பு போயிருக்கிறதென்று பார்” என்று சொல்லி லாஃப்ரா வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டாள். “ நான் நினைப்பது சரியென்றால் ரியா தான் தாமுவிற்கு செய்தி சொல்லி இருப்பாள். முடிந்ததென்றால் ரியாவுக்கும் தாமோதரனுக்கும் இடையில் நடந்த பேச்சின் ரெக்கார்டிங் எனக்கு வேண்டும்”
லாஃப்ராவின் வலப்பக்கம் அபி அமர்ந்து கொள்ள எதிரில் கருணாவும் இடப்பக்கம் ஆனந்தும் அமர்ந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் அபி, நான்கைந்து ஏ4 காகிதங்கள் எடுத்துக் கொண்டாள்.
ஆனந்த் தன் அறிக்கையை லாஃப்ராவிடம் சமர்ப்பித்தான்,”மேடம், நீங்கள் கேட்டுக்கொண்ட மொபைல் அழைப்புகளின் பட்டியல்” என்று கொத்தாக சில காகிதங்களை நீட்டினான்.
பின்னர்,” மேடம் வரும் பொழுது நீங்கள் சொன்னது போல் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளை விசாரித்தேன். ஒரு ஆள் இனிப்பு வாங்கி ஒத்துழைப்பு கொடுக்க தயார்”
“என்ன செய்தாய்?”
“மேலே கையோடு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன் மேடம். மாடிக்கு வர வேண்டும் என்றதும் ஆள் நின்றபடியே உச்சா போய் விட்டான். வெளியில் நிற்கிறான்”
“மயக்க மருந்து கொடுக்காமல் பல்லை பிடுங்கினால் எல்லாம் சரியாகிவிடும்” என்று இடைமறித்தாள் அபி.
“அபி, கொஞ்சம் இரு. நாம் இன்னும் இந்த கேசில் ஒரு அடி கூட எடுத்துவைக்கவில்லை. கவனம் கொள்” என்று சொல்லிய லாஃப்ரா ஆனந்த்தைப் பார்த்து,”அந்த ஆள் வெளியிலேயே நிற்கட்டும்.” என்றாள்.
“அபி,வண்டி ஓட்டுனரை அழைத்து அறையின் வெளியில் காவல் நிற்கச் சொல்” என்றாள்.
அபி காவலரை அழைத்து ஆணையிட, லாஃப்ரா,”சொல் ஆனந்த்” என்றாள்.
ஆனந்த் அனைவரையும் நோக்கி,’ஆள் கடத்தல் வகைகள் பற்றி விளக்கமாக அனைவருக்கும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. குழந்தைகள் கடத்தல், பெண்கள் கடத்தல், உடல் உறுப்புகளுக்காக ஆட்களை கடத்துதல், விரோதிகளை கடத்துதல் மற்றும் பணத்தையே குறிக்கோளாக கொண்டு ஆட்களை கடத்துதல்”
அனைவரும் உன்னிப்பாக கேட்ட வண்ணம் இருந்தனர்.
“பணத்துக்காக ஆட்களை கடத்தும் கும்பல்களிலும் இவ்வளவு அதிக ரான்சம் கேட்டு கடத்தும் கும்பல்கள் மிக குறைவு. நான் இது போன்ற ஹை ப்ரொஃபைல் ஆட்கள் மற்றும் அதிக ரான்சம் கேட்டு ஆள் கடத்தல் செய்யும் அடியாட்கள் கும்பலை மட்டும் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டேன்”
“சிட்டியில் மூன்று கும்பல்கள் தான் இத்தனை பெரிய கடத்தலில் கை வைக்க தைரியம் கொண்டவர்கள்”
”மூன்று கும்பல்களிலும் நமக்கு துப்பு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். மூவரும் இது தங்கள் வேலை இல்லை என்கிறார்கள்”
அபி இடைமறித்தாள்,” அப்பொழுது புதிதாக ஒரு கும்பல் நுழைந்திருக்கிறதா?”
லாஃப்ரா பொதுவாக அனைவருக்கும் சொன்னாள்,” தாமு கிளம்பிவிட்டார் சேலத்தில் இருந்து. இப்பொழுது மணி ஆறு ஆகிறது. இன்னும் மூன்று மணி நேரத்தில் சிட்டி வந்துவிடுவார். இன்னும் மூன்று மணி நேரம் தான் நமக்கு இந்த அலுவலகம். அதற்கு பின் திரும்பவும் நமது வழக்கமான அலுவலகம்”. அபி…” என்று லாஃப்ரா அபியைப் பார்த்தாள்.
“மேடம், அமர்சிங் காளான் பிரியாணி அருமையாய் செய்வானாம்” என்றாள் அபி.
“கருணா நீ அந்த பியூட்டி பார்லர் போய் வந்துவிடு”
“அபி, நீ ரியாவை மொபைலில் தொடர்பு கொண்டு விசாரி. எப்படி அவ்வளவு உறுதியாக சொன்னாள், ரூபா கடத்தப் பட்டுள்ளாள் என்று.”
“கருணா, தியாகு இன்னும் அழைப்பில் வரவில்லை பார்”
”இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம் மூன்றாவது மீட்டிங்கில் சந்திப்போம்” லாஃப்ரா சொல்லி வாய் மூடுமுன் அவளது மொபைலில் அழைப்பு வந்தது.
மொபைலில் எண் நோக்கிய லாஃப்ரா,” தியாகு” என்றாள். அனைவரும் உஷாராயினர். ஸ்பீக்கரில் அழைப்பை போட்டாள் லாஃப்ரா.
“லாஃப்ரா, நான் உனக்கு ஒரு சேதி வைத்துள்ளேன்”
“சொல் தியாகு, காத்திருக்கிறேன் எப்பொழுதும் போல்”
“அந்த ரான்சம் கேட்டு வந்த காகிதமும் மற்றும் நீ அனுப்பிய இரண்டு காகிதங்களும் ஒரே காகிதத்தில் எழுதப் பட்டவை”
“மேலும் ஏதாவது தியாகு?”
”அந்த கர்சிவ் எழுத்துக்கள் அழகாக எழுதப்பட்டுள்ளன”
இது எதற்கோ முன்னுரை என்று தெரிந்த லாஃப்ரா அமைதியாக இருந்தாள்.
“நாளை இரவு உணவு?”
“உன் வீட்டில் தான் தியாகு”
”அதற்குள் கேசை முடித்துவிடுவாயா? நல்லது அப்பொழுது இதையும் கேட்டுக் கொள். ரியா வீட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது அல்லவா”
“ஆமாம். ரியா தன் கைப்பட எழுதியது தான் அது”
“நீ சொல்வது உண்மையென்றால் அந்த பத்து கோடி கேட்டு எழுதப்பட்ட ரான்சம் நோட்டை எழுதியது ரியா தான்” என்றான் தியாகு.
லாஃப்ராவின் தலைமையில் அமர்ந்திருந்த அந்த டீம் ஒரு மின்சார அதிர்வு தங்களுக்குள் பாய்வதை உணர்ந்தது.
லாஃப்ரா தான் முதலில் தன்னிலை அடைந்தாள்.
லாஃப்ரா அபியிடம் சொன்னாள்,” அபி, ரியாவை மொபைலில் அழைக்க வேண்டாம்” என்ற லாஃப்ரா தொடர்ந்து,” அபி நாம் கேட்ட காவலர்கள் வந்து விட்டார்களா?” என்று கேட்டாள்.
வந்து விட்டார்கள் என்று தெரிந்ததும்,” ஒரு காவலரை அறைக்கு வெளியில் காவல் இருக்கச் சொல். ஆனந்த் இன்னொருவரை அழைத்துக் கொண்டு உடனே ரியாவின் வீட்டிற்கு போ. தாமதமாகிறது. முகவரி அபி உனக்கு வாட்ஸப் செய்வாள்” என்றாள்.
ஆனந்த், ஓட்டமும் நடையுமாக வெளியேறினான்.
“கருணா, நீ அந்த அழகு நிலையம் சென்று பார்த்துவிடு. உபயோகம் எதுவும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தவற விட்டதாக இருக்கக் கூடாது. ரூபாவின் புகைப்படம் எடுத்துக்கொள்”
கருணாவும் வெளியேறினான்.
லாஃப்ராவும் அபியும் அறையில் இருந்தனர். அறையின் வெளியில் ஒரு காவலர் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்.
லாஃப்ரா வெளியில் நின்றிருந்த காவலரை அழைத்து காத்திருந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியை உள்ளே விடுமாறு பணித்தாள்.
உள்ளே வந்த செக்யூரிட்டி லாஃப்ராவையும் அபியையும் பார்த்துவிட்டு, மேஜை மேல் மிச்சம் இருந்த சம்சாவை பசியுடன் பார்த்தான்.
லாஃப்ரா அவனிடம் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்,” இங்கே பாருங்கள். நீங்கள் ட்யூட்டியில் இருந்த பொழுது தான் ரூபா இங்கிருந்து கடத்தப் பட்டிருக்கிறாள். சிசிடிவி இல்லாத பொழுது நீங்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டாமா?”
அந்த செக்யூரிட்டி உஷார் பேர்வழியாக இருந்தான். கேள்வி கேட்டது லாஃப்ரா என்றதுமே, அவள் தான் உயர் அதிகாரி என்று அவன் தெரிந்து கொண்டிருந்தான்.
“மேடம் சற்று உட்கார்ந்து கொள்ளலாமா?” என்று அவன் லாஃப்ராவைப் பார்த்து கேட்டான்.
இடைமறித்த அபி,”உன் மேல் தான் எங்கள் சந்தேகமே. உனக்கு ராஜமரியாதை கேட்கிறதா” என்று அவனை கடுமையான குரலில் கேட்டாள்.
அபியை அடக்கிய லாஃப்ரா,” உட்காருங்கள் சார். நீங்களும் நாங்களும் காக்கும் தொழிலிலே தானே இருக்கிறோம்” என்று அந்த செக்யூரிட்டியை உட்கார அனுமதித்தாள்.
அவன் வசதியாக உட்கார்ந்து கொண்டு அபியை வெற்றிப் பார்வை பார்த்தான்.
“ஐ.பிஎல் கோப்பையை ஜெயிச்சுட்டே. வெளியில் தானே இருப்பாய். இரண்டு தட்டு தட்றேன் பார்” என்றாள் அபி அவனைப் பார்த்து.
அவன் அபியைப் பார்ப்பதை தவிர்த்து லாஃப்ராவை பார்த்து ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டான்.
லாஃப்ரா அவனிடம்,”உங்கள் பேர் என்ன சார்?” என்றாள்
“அமுதன்” என்று பதில் அளித்த அவன்,”மேடம் ரெண்டு சம்சா எடுத்துக்கட்டுமா?” என்று பரிதாபமாக லாஃப்ராவிடம் கேட்டான்.
“எடுத்துக்குங்க” என்று சம்சா இருந்த பிளேட்டை செக்யூரிட்டி அமுதன் பக்கம் தள்ளினாள் லாஃப்ரா.
இரண்டு சம்சாக்களை கையில் எடுத்துக் கொண்டு அமுதன், லாஃப்ராவிடம், ``நீங்க கேளுங்க மேடம். என்ன வேணா சொல்றேன். ஆனால் அந்த அம்மா கேட்டா சொல்லமாட்டேன்” என்று அபியைப் பார்த்து சொன்னான்.
“அமுதன் எத்தனை வருடமா இங்கே வேலை பார்க்கிறீங்க?”
“மே மாதம் வந்தால் மூன்று வருடம் முடிகிறது மேடம்”
“மே மாதம் வரவில்லையென்றால்” என்று இடைமறித்தாள் அபி.
அமுதன் அபியின் கேலியை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
லாஃப்ரா தொடர்ந்தாள், ``மே மாதம் வரவில்லையென்றால் ஜூன் மாதம் வரும். நீங்கள் சொல்லுங்கள் அமுதன், தாமோதரன் எப்படி?”
“ஆள் ரொம்ப மோசம் மேடம். மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கவே தெரிவதில்லை” அபியை பார்த்தவாறே சொன்னான்.
”மேடம், நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்ல வேண்டும். இப்ப கடைசியா ஒரு பெண் கிளம்பி போனதல்லவா. ரூபா பெண்ணின் கூட படிப்பதாக சொல்லிக் கொண்டு”
லாஃப்ராவின் கேட்கும் புலன் முழுதும் கூர்மையானது.” ஆமாம். ரியா. அவளுக்கென்ன”
``தாமோதரனும் அந்த பெண்ணும் மிக நெருக்கம் மேடம். தாமோதரன் சார் வந்து விட்டால் ரூபாவும் அமர்சிங்கும் வெளியில் போய் விடுவார்கள். இது அடிக்கடி நடக்கும்”
அமுதன் தொடர்ந்தான் “பொடி உறிஞ்சுது மேடம் அந்த பொண்ணு” லாஃப்ரா அதை கேட்டதாக காண்பித்துக் கொள்ளவில்லை.
“தாமோதரன் எப்படி?”
“அவருக்கென்ன மேடம். இரண்டு மூன்று கம்பெனி வைத்து நடத்துறாரு. அரசியல் அவருக்கு பகுதி நேர வேலை தான். நான் கூட என் பையனுக்கு ஒரு வேலை அவரிடம் கேட்டு வச்சுருக்கேன்”
“இங்கே அடிக்கடி வருவாரா?”
”இல்லே மேடம். அவர் வீடு அடையாரில் இருக்கிறது. அடிக்கடி பெண்கள் வருவார்களாம் மேடம்”
லாஃப்ரா கேட்டாள்,” ஏன், தாமுவிற்கு மனைவி இல்லையா?”
லாஃப்ராவின் கேள்விக்கு அபி பதில் அளித்தாள்,``கொரோனாலே இறந்துட்டாங்க மேடம். தாமோதரனின் அரசியல் வாழ்க்கைக்கு வசதியாக போய்விட்டது”
”சரி அமுதன், உங்கள் உதவி மீண்டும் தேவைப்படலாம். ஊரை விட்டு வெளியில் எங்கும் போய்விடாதீர்கள். வெளியே சென்று வெளியில் நிற்கும் காவலரை உள்ளே வரச்சொல்லுங்கள்” என்று லாஃப்ரா அமுதனை வெளியில் அனுப்பி வைத்தாள்.
அமுதன் வெளியில் சென்றதும் உள்ளே வந்த காவலரிடம்,”உள்ளே யாரையும் நான் சொல்லுமுன் விடாதீர்கள்” என்று ஆணை பிறப்பித்தாள்.
கருணா, அழகு நிலையத்தில் இருந்து லாஃப்ராவை தொடர்பு கொண்டான்,” எல்லாம் சரியாய் தான் இருந்திருக்கிறது மேடம். அக்கம் பக்க சிசிடிவிகளையும் ஒரு நோட்டம் விட்டேன். எப்படி கேமராக்களின் பார்வையில் படாமல் தப்பி இருக்கிறாள் என்று தெரியவில்லை”
“ஸ்கார்ஃப் கட்டி கருப்பு கண்ணாடி போட்டு வெளியில் வந்திருக்கலாம்.
“அபி, ஆனந்த் என்ன நிலையில் இருக்கிறான் என்று கண்டுபிடி” என்று அபியிடம் சொன்னாள்.
ஆனந்தை தொடர்பு கொண்ட அபி லாஃப்ராவிடம் சொன்னாள்,”மேடம் தேர்தல் ட்ராஃபிக்கில் சிக்கி இருக்கிறானாம். இடம் அடைந்தவுடன் இரையை தூக்கி வந்துவிடுவதாக சொன்னான். இன்னும் பத்து நிமிடத்தில் அடைந்து விடுவேன் என்றான்”
“அபி, வன்முறை கூடாது என்றும் மென்மையாக கையாள வேண்டும் என்றும் சொல்லிவிடு”
“சரி மேடம்” என்ற அபி ஆனந்திடம் அவ்வாறே மேலிடத்து ஆணையை கடத்தினாள்.
ஏதோ ஒரு கோவிலில் இருந்து இரவு ஏழு மணி அடித்தது. லாஃப்ரா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.’ இன்னும் இரண்டு மணி நேரம். தாமு வந்துவிடுவார்’
லாஃப்ரா, அபியை பார்த்து கேட்டாள், ``அபி, இரவு உணவுக்கு இன்னும் நேரம் இருக்கிறது போல”
குறிப்பறிந்த அபி சொன்னாள்,” ஆமாம் மேடம். இஞ்சி டீ சொல்றேன்”
அமர்சிங் டீ கொண்டுவந்து வைத்துவிட்டு லாஃப்ராவைப் பார்த்து,” வேறு ஏதாவது வேண்டுமா, மேடம்” என்று பணிவுடன் நின்றான்.
லாஃப்ராவின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது.
அபி தான் சொன்னாள்,”தேவை என்றால் கூப்பிடுவோம் அமர்”
அமர்சிங் அறையை விட்டு வெளியில் நடந்தான்.
அமர்சிங் அறையை விட்டு வெளியில் சென்றதும் லாஃப்ரா, அபியைப் பார்த்து சொன்னாள்,”ஆமை வேகத்தில் நகர்கிறோம் அபி”
டீயை ஒரு கையில் ஏந்தியவாறு லாஃப்ரா இன்னொரு கையில் சைபர் துறையில் இருந்து வந்திருந்த ரியாவின் மொபைல் அழைப்பு பட்டியலை கையில் எடுத்தாள்.
ரூபாவுக்கும் தாமோதரனுக்கும் ரியாவிடம் இருந்து அதிக அளவில் அழைப்புகள் சென்றிருந்தன. அதே எண்களில் இருந்து அழைப்புகள் உள்ளே வந்திருந்தன.
“அபி, இந்த ஆள் தாமு குளறுபடியான ஆளாக இருக்கிறாரே” என்றபடி தாமோதரனின் மொபைல் அழைப்பு பட்டியலை எடுத்து பார்த்தாள், லாஃப்ரா.
ரூபா மற்றும் ரியா தவிர்த்து மேலும் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அதிக அளவில் தாமோதரனுக்கு அழைப்புகள் வந்திருந்தன. லாஃப்ரா அந்த குறிப்பிட்ட எண்ணை வளையமிட்டு காண்பிக்க அபி, உடனே சைபர் செல்லுக்கு தொடர்பு கொண்டாள்.
பின் லாஃப்ராவிடம் ஒரு வித சிரிப்புடன் அபி சொன்னாள்,”மேடம், அந்த அழைப்புகள் ரேகா என்ற பெண்ணிடம் இருந்து வந்துள்ளன. அவள் ஒரு வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறாள்”
“அபி, ரேகாவை மொபலில் தொடர்பு கொள்” என்றாள் லாஃப்ரா.
மொபைல் ஸ்பீக்கரை ஆன் செய்து, ஹலோ சொன்ன ரேகாவிடம் அபி தன் கடுமையான குரலில் ஆரம்பித்தாள்,” நான் சென்னை குற்றப் பிரிவை சார்ந்த இன்ஸ்பெக்டர் அபி பேசறேன். உங்களிடம் கொஞ்சம் பேசணும்”
இதைக் கேட்டவுடனேயே ரேகா “சரி மேடம். எங்கே நான் வரணும். நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா” என்று கேட்டாள்.
லாஃப்ரா ஸ்பீக்கரில் பேசினாள்,” உங்கள் வீடு எங்கே இருக்கிறது ரேகா?"
எக்மோர் அருகில் ஏதோ ஒர் இடத்தை சொன்னாள் ரேகா. லாஃப்ரா ஸ்பீக்கரில் தொடர்ந்தாள், ``உங்களுக்கு உதவி செய்யவே காவல்துறை இருக்கிறது ரேகா. கமிஷனர் ஆஃபீஸ் வர முடியுமா? இன்னும் சற்று நேரத்தில் நான் வந்து விடுவேன்.”
லாஃப்ரா ரேகாவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது லாஃப்ராவின் மொபைலுக்கு ஆனந்த்தின் அழைப்பு வந்தது. ரேகாவுடன் பேசிக் கொண்டிருந்த இணைப்பை துண்டித்து அபியிடம் கொடுத்த லாஃப்ரா தன் மொபைலை ஸ்பீக்கரில் போட்டாள்.
“சொல்லுங்க ஆனந்த்”
”மேடம், ரியா இன்னும் வீடு வந்து சேரவில்லை”
“காத்திருந்து வந்தவுடன் கையோடு அழைத்து வா. நான் கமிஷனர் அலுவலகத்துக்கு ஷிஃப்ட் ஆறேன்”
அபியை அழைத்த லாஃப்ரா,”மணி எட்டு ஆகப்போகுது. அமர்சிங்கை அள்ளிப்போட்டுக்க. அந்த வேலைகார பெண்ணை விட்டு விடு. அமுதன் வேண்டாம். நான் பைக்கில் கமிஷனர் ஆஃபிஸ் வந்துவிடுகிறேன். நீயும் அமர்சிங்கும் ஒரு ஆட்டோவில் அந்த காவலருடன் வந்துடுங்க”
அபி லாஃப்ராவைப் பார்த்து சொன்னாள்,``காளான் பிரியாணி வேஸ்ட்டாப் போயிடுச்சே”
பாந்தியன் சாலை வழியாக லாஃப்ரா கமிஷனர் அலுவலகம் அடைந்த பொழுது ரேகா அவளுக்காக காத்திருந்தாள். லாஃப்ரா, இன்ஸ்பெக்டர் அபி வருவதற்கு காத்திருந்து அவள் வந்தவுடன் அபியிடம் சில ஆணைகளை கிசுகிசுத்தாள்.
அவற்றை ஏற்றுக் கொண்ட அபியும் சிறிது நேரத்தில் மறைந்தாள்.
லாஃப்ரா, தன் அறைக்குள் ரேகாவை அழைக்கும் முன் அவளுக்கு டீ 15 போரூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது.
“ஒரு இளம்பெண் சடலம் போரூர் ஏரி கரையில் கிடக்கிறது”
தொடரும்...
அன்புடன்,
மீரா போனோ
(எஃப்.எம்.பொனவெஞ்சர்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...