லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல்: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெய்ரூட் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் இன்று(நவ. 17) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் பெய்ரூட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை நள்ளிரவு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதப்படை, இஸ்ரேலின் ஹைஃபா நகரில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதற்கு இஸ்ரேல் ராணுவத்தின் பதிலடி தாக்குதலாக பெய்ரூட் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. இதன் காரணமாக, பெய்ரூட்டில் புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள பெக்கா பள்ளத்தாக்கில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாக் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் முதல் லெபனானில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் இதுவரை 3,452 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில் காஸாவில் நேற்று 24 பேர் கொல்லப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு அக்டோபர் முதல் இதுவரை, காஸாவில் பல்வேறு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,799-ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.