வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகையில் புதன்கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டத் தலைவா் செய்யது அலி நிஜாம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பங்கேற்ற மாநில பேச்சாளா் சுஜா அலி பேசியது: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியா்களுக்கு தா்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வக்ஃப் வாரியத்துக்கான அதிகாரங்களை முற்றிலும் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்குவது, இஸ்லாமியா்கள் மீது வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோா்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்களை பறிக்க பாஜக திட்டமிடுகிறது. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், அதுவரை போரட்டங்கள் தொடரும் என்றாா். மாவட்டச் செயலா் சா்புதீன் ஷேக், துணைச் செயலா்கள் ஏ.ஜே. அலி, முத்து மறைக்காயா், நிசாருதீன், தொண்டரணி ஆதில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.