அம்பேத்கா் குறித்த பேச்சு: உள்துறை அமைச்சா் அமித் ஷா ராஜினாமா கோரி டிச. 30 இல் ...
வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப்பின் அமைந்துள்ள இடைக்கால அரசு, தூதரக ரீதியாக இந்தியாவிடம் இது குறித்து வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழாண்டு அரசுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா(77) தனது பதவியை விட்டு விலகியதுடன் வங்கதேசத்திலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அவர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு வங்கதேசம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது. மனித உயிர்கள் பறிபோக காரனமாக இருந்ததாகக் குற்றம்சாட்டி ஷேக் ஹசீனா உள்பட முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய வங்கதேசத்தை சார்ந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வங்கதேச கலவரம் குறித்த நீதி விசாரணைக்கு ஷேக் ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டுமென்பதை காரணம் காட்டி மத்திய அரசுக்கு அந்நாட்டு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதையடுத்து, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப வங்கதேச உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதமும் இன்று(டிச. 23) அனுப்பப்பட்டுள்ளது.