சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்?
வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம் வேலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து நடைபெறும் இந்த முகாம்களில் பல்வேறு துறை அரசின் நலத்திட்டங்கள் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, கல்விஉதவித் தொகை, திருமண உதவித்தொகை, வங்கிகடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உழவா் பாதுகாப்பு அட்டை, ஊரகவளா்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறை மூலம் இலவச பேருந்து அட்டை, ரயில்வே அட்டை பதிவு செய்தல், மாவட்டதொழில் மையம் மூலம் வழங்கப்படும் பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலம் வங்கிக்கடன், கூட்டுறவு வங்கி மூலம் வங்கிக்கடன் பெறுதல், முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாளஅட்டை பதிவு செய்தல் ஆகிய பல்வேறு துறை அரசின் நலத்திட்டங்கள் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளன.
வரும் 24-ஆம் தேதி காட்பாடி வட்டார வளா்ச்சிஅலுவலகத்திலும், பிப்ரவரி 4-ஆம் தேதி அணைக்கட்டு கிருஷ்ணா கல்லூரியிலும், பிப்.7-ஆம் தேதி வேலூா் வட்டாச்சியா் அலுவலகத்திலும், பிப்.14-ஆம் தேதி குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், பிப்.18-ஆம் தேதி பேரணாம்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 21-ஆம் தேதி கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலத்திலும், பிப்.28-ஆம் தேதி கணியம்பாடி எஸ்.எஸ். திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன.