வரலாறு படைத்தாா் பெய்டன் ஸ்டொ்ன்ஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸ், ஓபன் எராவில் புதிய வரலாறு படைத்தாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், 6-2, 4-6, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த உக்ரைனை சோ்ந்த முன்னாள் சாம்பியன் எலினா ஸ்விடோலினாவை அவா் வென்றாா். இதன் மூலமாக, ஓபன் எராவில் மகளிா் டென்னிஸ் போட்டியில் தொடா்ந்து 3 ஆட்டங்களில் 3-ஆவது செட் டை பிரேக்கா் மூலமாக வென்ற முதல் போட்டியாளா் என்ற சாதனையை படைத்தாா்.
காலிறுதியில் ஸ்விடோலினாவை அவ்வாறு வீழ்த்திய ஸ்டொ்ன்ஸ், முந்தைய இரு சுற்றுகளில் ஜப்பானின் நவோமி ஒசாகா (6-4, 3-6, 7-6 (7/4)), அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (2-6, 6-2, 7-6 (7/3)) ஆகியோரையும் அவ்வாறு வீழ்த்தியிருக்கிறாா். ஸ்டொ்ன்ஸ் தனது அரையிறுதியில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினியுடன் மோதுகிறாா்.
டபிள்யூடிஏ 1000 நிலையிலான போட்டியில் ஸ்டொ்ன்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் முறையாகும். 1998-க்குப் பிறகு, இத்தாலியன் ஓபனில் அறிமுகமான சீசனிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை ஸ்டொ்ன்ஸ் பெற்றாா். இதற்கு முன் செரீனா வில்லியம்ஸ் அவ்வாறு முன்னேறியிருந்தாா்.
இதனிடையே, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 7-6 (7/5) என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த ஆண்ட்ரீவாவை வீழ்த்தினாா். இத்துடன் ஆண்ட்ரீவாவை 4-ஆவது முறையாக சந்தித்த கௌஃப், அனைத்திலுமே வென்றிருக்கிறாா்.
அடுத்ததாக அரையிறுதியில், பெலாரஸின் அரினா சபலென்கா அல்லது சீனாவின் கின் வென் ஜெங் ஆகியோரில் ஒருவருடன் கௌஃப் மோதவுள்ளாா்.
அரையிறுதியில் அல்கராஸ்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினாா்.
இருவரும் நேருக்கு நோ் மோதியது, இது 6-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் 4 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். இதனிடையே ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-3, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 7-5, 6-3 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றாா். காலிறுதியில், ரூட் - இத்தாலியின் யானிக் சின்னருடனும், பால் - போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸுடனும் மோதுகின்றனா்.
இதில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் முந்தைய சுற்றில் 7-6 (7/2), 6-3 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை வெளியேற்றினாா். ஹா்காக்ஸ் 7-6 (7/5), 4-6, 7-6 (7/5) என்ற கணக்கில், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வெளியேற்றினாா்.
இதனிடையே மற்றொரு காலிறுதியில், நடப்பு சாம்பியனான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் - இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா். முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ் - 7-6 (7/3), 6-1 என பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸையும், 8-ஆம் இடத்திலிருக்கும் முசெத்தி 7-5, 6-4 என ரஷியாவின் டேனியல் மெத்வதெவையும் தோற்கடித்தனா்.