Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு...
`வாடி ராசாத்தி!' - சதமடித்த ஸ்மிருதி மந்தனா; இன்னும் 2 சதங்களில் காத்திருக்கும் சாதனை
இந்தியா மற்றும் இலங்கை நடத்திவரும் நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கெதிராக தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற நிலைக்குள்ளானது.
இத்தகைய சூழலில், அரையிறுதியில் மீதமிருக்கும் ஒரு இடத்தைத் தங்களுக்கானதாக மாற்ற நியூசிலாந்தும் இந்தியாவும் இன்று (அக்டோபர் 23) மோதின.
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்யவே, ஸ்மிருதி மந்தனாவும் பிரதிகா ராவலும் இந்திய அணியின் பேட்டிங்கைத் தொடங்கினர்.

ஸ்மிருதி மந்தனாவைப் பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் இந்தியா வென்ற முதல் இரு போட்டிகளில் 8, 23 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.
அடுத்த 3 போட்டிகளில் 23, 80, 88 ஆகிய ரன்களை அடித்திருந்தாலும் அவை இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை.
அதனால், இந்திய அணிக்கு முக்கியமான இன்றைய போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை கொடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள்ளானார் மந்தனா.
ஆனால், அவ்வளவெல்லாம் யோசிக்காமல் நிதானமாக இன்று பேட்டிங்கைத் தொடங்கினார் மந்தனா. தனது முதல் 10 ரன்களைக் கடக்கவே 20 பந்துகளை எடுத்துக்கொண்டார்.
மறுமுனையில் இருந்த பிரதிகா ராவலும் பொறுமையாக ஆட, அடித்து ஆட வேண்டிய பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை மட்டுமே எடுத்தது இந்தியா.
ஆனால், பவர்பிளே முடிந்த பிறகுதான் மந்தனா தனது பவர் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

அவசரப்படாமல் தேவையான பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ் என அடித்து 49 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டு, இந்த உலகக் கோபப்பியில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவர் அரைசதம் அடித்த ரன்னோடு இந்தியா 100 ரன்களைத் தொட்டது. மந்தனாவுடன் சேர்ந்து பிரதிகா ராவலும் தனது கியரை மாற்றி பவுண்டரிகளாக அடிக்க இந்தப் பார்ட்னர்ஷிப் 26 ஓவர்களில் 150 ரன்களையும் கடந்தது.
77 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த மந்தனா எமிலி கெர் வீசிய அடுத்த ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றபோது எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானதாக நடுவர் விக்கெட் கொடுத்தார்.
உடனே மந்தனா ரிவ்யூ எடுத்தார். இருப்பினும் பந்து பேட்டில் படவில்லை என்று நினைத்து பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ஆனால், ரிவ்யூவில் பந்து பேட்டில் உரசியிருப்பது தெரியவரே விக்கெட்டிலிருந்து தப்பித்தார் மந்தனா.

பின்னர், மீண்டும் ஓவர் வீச வந்த அதே எமிலி கெர் ஓவரில் பேக் டு பேக் சிக்ஸ், ஃபோர் அடித்து 90 ரன்களைக் கடந்த மந்தனா 88 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 14 சதத்தைப் பதிவு செய்தார்.
109 ரன்களில் மந்தனா அவுட்டாக பிரதிகா ராவலுடனான அவரின் பார்ட்னர்ஷிப் 212 ரன்களில் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு பிரதிகா ராவல் சதமடித்து அவுட்டாக, ஜெமிமா அரைசதமடிக்க 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது இந்தியா. 48-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேக் லென்னிங்-க்கு (15) அடுத்த இடத்தில் இருக்கும் மந்தனா இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால் அவரைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடிப்பார்.