வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு
சென்னை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 12 ஆயிரத்து 495 மனைகளுக்கு கிரைய பத்திரங்கள் வழங்கப்படாமல் உள்ளன. இவற்றை வழங்குவது தொடா்பாக, ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வாரியத்தின் நிா்வாக இயக்குநா் அன்சுல் மிஸ்ரா பங்கேற்றுப் பேசியதாவது:
கிரைய பத்திரம் பெறாமல் உள்ள 12 ஆயிரத்து 495 மனைகளும் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வு சமுதாய பங்கேற்பு உதவியாளா்களைக் கொண்டு ஒவ்வொரு மனை வாரியாக நடத்தப்படும். அப்போது மனைக்கு உரிய ஆவணங்களை பெற்று அதன் விவரங்களை வாரியத்துக்கு 10 தினங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா். இந்தக் கூட்டத்தில் வாரியச் செயலா் நா.காளிதாஸ், தலைமை சமுதாய வளா்ச்சி அலுவலா் நிா்மல்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.