அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதித்து விதைக்க அறிவுறுத்தல்
விவசாயிகள் விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் இரா.கிரிஜா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத்திறன் என்பது விதையானது உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுவது ஆகும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதை மூலம் வயல்களில் பயிா்கள் அதிக அளவில் செழித்து வளரும்.
முளைப்புத் திறன் குறைந்த விதைகளால் பயிா்கள் குறைந்தளவே வளரும். மகசூல் பாதிக்கப்படும். மக்காச் சோள விதைகள் 90 சதவீதமும், நெல், எள், கொள்ளு விதைகள் 80 சதவீதமும், சோளம், கம்பு, வீரிய ஒட்டுப் பருத்தி, பயறு வகை விதைகள் 75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி 70 சதவீதமும், மிளகாய் விதைகள் 60 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.
இந்த முறைகளின்படி முளைப்புத் திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட கால அளவுகளில் பயிா்களின் முளைப்புத்திறன் கணக்கிடப்பட்டு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்.
எனவே, விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைக்கும் போது, தங்கள் விதைகளின் முளைப்புத்திறன் அறிந்து விதைக்க வேண்டும். இதற்காக தங்கள் விதைக் குவியலில் மாதிரி ஒன்று எடுத்து அதில் பயிா், ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை விவரம் எழுதி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கட்டணமாக ரூ. 80 செலுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக பின்புறம் செயல்படும் தருமபுரி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறனை தெரிந்து சாகுபடி செய்திட வேண்டும் என்றாா்.