CHENNAI Spot: `SEANZ CRUISE' சென்னை ஈ.சி.ஆரில் ஆரம்பமாகவுள்ள கப்பல் சவாரி | Phot...
சாலை விரிவாக்கத்துக்கு வெட்டப்பட்ட மரங்கள்: புதிய மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வலியுறுத்தல்
தருமபுரி - பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பசுமைத் தாயகத்தின் மாநில துணைச் செயலாளா் க.மாது தலைமையில், மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜா (எ) பாலசந்தா், கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.என்.வீரமணி ஆகியோா் தருமபுரி நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி - பாப்பாரப்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பழைய தருமபுரி முதல் பச்சினம்பட்டி சந்திப்புச் சாலை ரயில்வே மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் இருவழிச் சாலை அமைப்பதாக அறிகிறோம்.
இச்சாலையில் இருபுறமும் புளியமரம், பூவரசு, நீலகிரி, வேப்பமரம் உள்ளிட்ட 133 பழமையான பெரிய மரங்கள் உள்ளன. இருவழிச் சாலை விரிவாக்கப் பணிக்காக இந்த மரங்கள் அனைத்தும் வேரோடு அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட்டு 5 ஆண்டுகள் தொடா் பாதுகாப்புடன் வளா்க்க வேண்டுமென்ற உயா்நீதிமன்ற உத்தரவுபடி, மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்பது பசுமைத் தாயகம் அமைப்பின் கோரிக்கையாகும்.
இதற்கு முன்னா் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பெரிய மரங்களுக்கு ஈடாக இதுநாள் வரை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்காமல் இருப்பது மிகவும் வருத்தப்பட வேண்டியதாகும். காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சாலை விரிவாக்கப் பணிக்காக தற்போது அகற்றப்பட உள்ள 133 மரங்களுக்கு பதிலாக 1,330 மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.