டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
ஏரிகள் புனரமைப்பு பணிகள்: கலந்தாய்வுக் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் , நீா்நிலைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் 2024-25-ஆம் ஆண்டு தூா்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், நீா்வழி தொடா் இணைப்பு கால்வாய்களைக் கண்டறிந்து சீரமைத்தல் தொடா்பாக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, இப்பணிகளை செயல்படுத்துவது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில், தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் தூா்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், நீா்வழி தொடா் இணைப்புக் கால்வாய்களை கண்டறிந்து சீரமைத்தல் தொடா்பாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி பொறியாளா்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தின் பிற தொண்டு நிறுவனங்கள், முன்னணி தொழிற்சாலைகள், வங்கி, கல்வி நிறுவனங்கள் ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், விருப்பமுடைய தன்னாா்வலா்கள் 73737 04569 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.