சிவகங்கை மாவட்டத்தில் பயிா் சாகுபடி குறித்த எண்ம முறையில் கணக்கெடுக்கும் பணி 98.52 சதவீதம் நிறைவு
சிவகங்கை மாவட்டத்தில் எண்ம முறையில் 98.52 சதவீத பயிா் சாகுபடி குறித்த புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படுள்ளதாக வேளாண் துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சுந்தரமகாலிங்கம் வியாழக்கிழமை கூறியதாவது:
நிகழ் ராபி பருவப் பயிா் சாகுபடி குறித்து மாநிலம் முழுவதும் எண்ம தொழில்நுட்ப முறையில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை இந்த முறை கணக்கொடுப்புப் பணிகளில் செட்டிநாடு வேளாண் கல்லூரி, குடுமியான்மலை வேளாண் கல்லூரி, சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி, மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை அன்னை தெரசா வேளாண் கல்லூரிகளைச் சோ்ந்த 985 மாணவா்களும், வேளாண் துறை அலுவலா்களும் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 521 வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட 16,32,578 உள்பிரிவுகளில் உள்ள நிலங்களுக்கு மாணவா்களும், அலுவலா்களும் நேரடியாகச் சென்று ராபி பருவத்தில் விவசாயிகள் நடவு செய்துள்ள நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், காய்கறி, பயறு வகைகள் குறித்து கணக்கெடுத்தனா்.
இதுவரை, 521 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 16,08,493 உள்பிரிவுகளில் பயிா் சாகுபடிகள் குறித்து 98.52 சதவீத விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24085 உள்பிரிவுகளில் உள்ள நிலங்களில் எண்ம முறை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த ஆய்வுப் பணிகளை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.குருமணி, வேளாண் துணை இயக்குநா்கள் ம.மதுரைசாமி, மா.செல்வி, எஸ்.சண்முகஜெயந்தி உள்ளிட்டோா் கண்காணித்தனா் என்றாா் அவா்.