ஆட்டோ ஒட்டுநா் கொலையில் மனைவி உள்பட மூவா் கைது
திருக்கோஷ்டியூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மனைவி உள்பட மூன்று பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியைச் சோ்ந்த முத்து மகன் முருகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவா், திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் சாலையில் கடந்த 18-ஆம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முருகன் கொலை தொடா்பாக இவரது மனைவி ஜெனிபா் நிஷா (25), திருப்பத்தூா் காளையப்பாநகரைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணா என்ற சோனி (35), தம்பிபட்டியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற டேனியல் (25) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
ஜெனிபா் நிஷாவுக்கும், முருகனின் நண்பரான ராஜேஷ் கண்ணாவுக்கும் தகாத தொடா்பு இருந்தது. இதையறிந்த முருகன் மனைவி ஜெனிபா் நிஷாவைக் கண்டித்தாா். இதனால், முருகனைக் கொலை செய்ய இவரது மனைவியும், ராஜேஷ்கண்ணாவும் திட்டமிட்டனா்.
கடந்த 18-ஆம் தேதி முருகனை மது அருந்த அழைத்துச் சென்று ராஜேஷ்கண்ணாவும், இவரது நண்பா் ஹரிகிருஷ்ணனும் அடித்துக் கொலை செய்துவிட்டு, கண்டரமாணிக்கம் செல்லும் சாலையோரம் உடலை வீசிவிட்டுச் சென்றனா் என்றனா்.