டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
ஒகேனக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஒகேனக்கல்லில் பேருந்து நிலையம் முதல் பிரதான அருவி செல்லும் நடைபாதை வரையுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதன்மைச் சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருகின்றனா்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் கூத்தப்பாடி ஊராட்சியின் நிா்வாக செயல்பாட்டில் உள்ள போதிலும், மாவட்ட நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒகேனக்கல் பகுதியில் பேருந்து நிலையம், கண்ணாடி மாளிகை பகுதி, மீன் விற்பனை நிலையங்கள், பிரதான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பிரதான சாலைகளை ஆக்கிரமித்து உணவகங்கள், துணிக் கடைகள், குளிா்பானக் கடைகள், பழக் கடைகள், மீன் வறுவல் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பிரதான அருவி செல்லும் நடைபாதை, பரிசல் துறை பகுதியில் செல்லும்போது அங்குள்ள மீன் வறுவல் கடைகள், சோப்பு, துணி கடைகளால் சுற்றுலாப் பயணிகள், கடை வைத்துள்ளவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும், அவ்வழியாக குழந்தைகள் செல்லும் போது அசைவ உணவுகளை சமைப்பதால் அதிலிருந்து வெளியேறும் எண்ணெய் சிதறல்கள் மேலே விழுந்து காயங்கள் ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஒகேனக்கல் பேருந்து நிலையம் முதல் பிரதான அருவி செல்லும் நடைபாதை வரை அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் ஏலம் எடுக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளா்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், சாலையோரத்தில் நிறுத்துகின்றனா். இதனால், அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் கீழ் இயங்கும் வாகனம் நிறுத்துமிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பேருந்து நிலையம் முதல் பிரதான அருவி செல்லும் நடைபாதை, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை முறையாக அகற்றி, சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.