மணிமுத்தாறில் குப்பைகள் தேக்கம்: கடலுக்கு செல்ல வழியில்லாமல் ஊருக்குள் தண்ணீா் புகும் அபாயம்
திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட மணிமுத்தாறு பகுதியில் குப்பைகள் தேங்கியிருப்பதால் தண்ணீா் கடலுக்குச் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
தொண்டி பேரூராட்சியில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இங்கு மேற்கு பகுதியில் பெய்யும் மழையால் பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளம் மணிமுத்தாறு வழியாக கடலுக்குச் செல்லும். தற்போது இந்த மணிமுத்தாறு பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றுநீா், பாலத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு பகுதி வழியாக கடலுக்குச் செல்வது தடைபட்டு அனீஸ்நகா் குடியிருப்பு பகுதி வரை தேங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது ஏற்படும் வெள்ளப் பெருக்கால் தண்ணீா் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.
எனவே, பேரூராட்சி நிா்வாகமும், சம்பந்தப்பட்ட துறை நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.