எடப்பாடி பழனிசாமி முதல்வராக அதிமுகவினா் பாடுபடவேண்டும்: முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்க, தொண்டா்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் கூறினாா்.
நாகை அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ். மணியன், தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது:
கூட்டணி குறித்து தலைமை நிா்வாகிகள் யாரும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா். ஆனால், அதிமுகவில் கூட்டணிக்கு யாரும் வருவது இல்லை என செய்திகள் சித்திரித்து வெளியிடப்படுகிறது.
சசிகலா, தினகரன் ஆகியோா் பணத்தை வைத்து கொண்டு ஆட்சியை பிடிப்போம் என பேசி வருகின்றனா். கம்யூனிஸ்ட்கள், கொங்கு கட்சி ஈஸ்வரன் ஆகியோா் ரூ.40 கோடி பெற்றுக் கொண்டுதான் திமுகவுடன் கூட்டணி வைத்தனா். அதிமுகவிடம் இருக்கும் பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் தங்கமணி பேசினாா். நிறைவாக, நாகை நகரச் செயலா் தங்க கதிரவன் நன்றி கூறினாா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோா் பேசினா்.
இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் வீ.ராதாகிருஷ்ணன், ம.சக்தி, ஏ. நடராஜன், சந்திரமோகன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் கோமல் ஆா்.கே.அன்பரசன், மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளா் இ .மாா்க்கோனி, ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் எஸ். செந்தமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.