ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!
மும்பை புறநகர் ரயிலில் சீட் பிடிப்பதில் தகராறு; சக பயணியை கத்தியால் குத்திக் கொலைசெய்த சிறுவன்!
மும்பையில் புறநகர் ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறுவது என்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும். புறநகர் ரயிலில் அடிக்கடி பயணிகள் இருக்கைக்காக சண்டையிட்டுக்கொள்வது வழக்கம். அது போன்ற சண்டை சில நேரங்களில் போலீஸ் நிலையம் வரை சென்ற சம்பவங்களும் நடந்திருக்கிறது. பெண் பயணிகள் கூட புறநகர் ரயிலில் அடிதடியில் இறங்குவதுண்டு. மும்பை புறநகர் பகுதியில் உள்ள டிட்வாலாவில் வசித்து வந்த அங்குஷ் பாலேராவ்(34) என்பவர் மும்பை காட்கோபர் பகுதியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் நான்காவது சீட்டில் அமர்வது தொடர்பாக அங்குஷுக்கும், டிட்வாலாவை சேர்ந்த 16 வயது மைனர் வாலிபருக்கும் இடையே ரயிலில் தகராறு ஏற்பட்டது.
இதனால் அங்குஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து 16 வயது மைனர் சிறுவனை அடித்ததாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க முடிவு செய்த மைனர் வாலிபர் முன்கூட்டியே காட்கோபர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்குஷ் வரவிற்காக காத்திருந்தார். அவர் தன்னுடன் கத்தியை எடுத்துச்சென்று இருந்தார். அங்குஷ் ரயிலில் இருந்து இறங்கி வேலைக்கு சென்ற போது பின்னால் இருந்து அவரை மைனர் வாலிபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அங்குஷ் உடனே ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கத்தியால் குத்தப்பட்டதில் கல்லீரல் சேதம் அடைந்திருந்தது. இதனால் சிகிச்சை பலனலிக்காமல் அங்குஷ் இறந்து போனார். கத்தியால் குத்திய மைனர் வாலிபர் முகத்தில் துணியால் மூடியிருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆனால் ரயிலில் இருவரும் சண்டையிட்ட போது மைனர் சிறுவனை அங்குஷ் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்திருந்தார். அப்புகைப்படம் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியதாக இன்ஸ்பெக்டர் ரோஹித் சாவந்த் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "குற்றவாளியிடம் விசாரித்தபோது குத்துவதற்கு பயன்படுத்திய கத்தியை தனது சகோதரர் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். உடனே அவரது சகோதரர் மொகமத் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார். கைதான மைனர் சிறார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.