பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை பயணிகள...
கோவை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்!
கோவை: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலர் கே.அபிராமி, வணிகர் பாசறை மாவட்டச் செயலர் பி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இதையும் படிக்க : மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!
அப்போது அவர்கள் பேசியதாவது:
"நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியின் கொள்கைக்கு முரணாக பேசி வருகிறார். அவர் தமிழ்த் தேசியம் பேசுவது, அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொல்வது போன்றவையெல்லாம் ஏற்கத்தக்கவை இல்லை.
திராவிட பாரம்பரியம் வலுவாக உள்ள தமிழ்நாட்டில் சீமானின் கருத்துகள், பேச்சுகள் யாவும் எங்களைப் போன்ற நிர்வாகிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றன.
சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் குறைகளை பிரச்னைகளை கேட்கவும், சரி செய்யவும் கட்சியில் ஆள் இல்லை. களத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் சீமானை சென்றடைவதில்லை. வேலைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் பெண் நிர்வாகிகளின் கருத்துகளை அவர் ஏற்பதில்லை. எனவே அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.
எங்களைப் போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அவர்கள் அடுத்து எந்த கட்சிக்கு செல்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எங்களின் விலகலை முறைப்படி மண்டல நிர்வாகிகளுக்கு தெரிவித்துவிட்டோம்" என்றனர்.