பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை பயணிகள் அவதி
பென்னாகரம்: பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இலவச கழிப்பறை இரவு நேரங்களில் பூட்டப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
பென்னாகரம் பகுதிக்கென ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் பகுதி அருகில் அமைந்துள்ளதாலும், பல்வேறு கிராமங்களைக் கொண்டுள்ளதாலும் கல்வி, வேலைவாய்ப்புக்காக நாள்தோறும் பென்னாகரம் பகுதிக்கு சுமாா் 1000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்லுகின்றனா்.
புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை முழு நேரமாக திறக்கப்படுவதில்லை. இரவு 8 மணிக்கு மூடப்படுவதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் சூழல் ஏற்படுகிறது. எனவே, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறையை முழுமையாக திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.