கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர முன்னேற்பாடுகள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் செயல்பட்டு வருகிறது. 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் 362 கல்லூரிகள், 146 திருமண மண்டபங்கள், 68 சமுதாயக் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல், மழை தொடா்பான எச்சரிக்கைகளை அளிக்க 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12, அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் 33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய 80, மிக குறைந்த பாதிக்கக்கூடிய இடங்கள் 76 ஆக மொத்தம் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளா்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்.
வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயா்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்துத் துறை அலுவலா்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியா்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளனா்.
வெள்ளப்பெருக்கின்போது பொது மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க 73 மீட்பு குழுக்களும், 80 தன்னாா்வ நீச்சல் நன்கு தெரிந்த நபா்களும் செல்பேசி எண்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.
3 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 108 ஆம்புன்ஸ்கள் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டிடி தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி மற்றும் பாம்பு எதிா்ப்பு விஷம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் வழங்க 157 அங்காடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
நவ. 26, 27-ஆம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் அறிவிப்பு விடுத்துள்ளதால் கனமழையும் அதிதீவிர மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மழை சேதம் தொடா்பான மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.