டிச. 9-இல் சட்டப்பேரவை கூடுகிறது: மு.அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடா் டிச. 9-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டத் தொடா் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 20-இல் தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு கூட்டத் தொடருக்கும் மற்றொரு கூட்டத் தொடருக்குமான இடைவெளி ஆறு மாத காலம் என்பதால், பேரவையின் அடுத்த கூட்டத்தை டிசம்பரில் நடத்த வேண்டும். அதன்படி, கூட்டத்துக்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: சட்டப்பேரவைக் கூட்டத்தை டிச. 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன். பேரவைக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும்.
பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்.
அவை உரிமை மீறல் தொடா்பாக நடவடிக்கை எடுப்பது நடைமுறையில் இருக்கிறது. சில உரிமை மீறல்கள் ஆய்வில் இருந்து வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத் தொடரை படிப்படியாக நேரலை செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
முக்கிய பிரச்னைகள் விவாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் மூன்று நாள்கள் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மூன்று நாள்களிலும் சில முக்கிய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
குறிப்பாக, பதவிக் காலம் நிறைவடையவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள், மழை வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியன குறித்து பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.