கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசார...
சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இத்தாலி!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் போடிக் வான் டெ ஜான்ட்ஷுல்பை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 16 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் - நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்போா் மோதினா். இதில் கிரீக்ஸ்போா் சின்னருக்கு சற்று சவால் அளித்தாா். அதனால் முதல் செட்டை 7-6 (7/2) என போராடி வென்ற சின்னா், அடுத்த செட்டை 6-2 என எளிதாகக் கைப்பற்றினாா். 1 மணி நேரம், 31 நிமிஷங்களில் ஆட்டத்தை முடித்தாா் சின்னா்.
இதையடுத்து, 2-0 என முன்னேறிய இத்தாலியின் வெற்றி உறுதியானதால், இரட்டையா் ஆட்டம் கைவிடப்பட்டது. இத்தாலி சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இதன் மூலம், 2013-க்குப் பிறகு டேவிஸ் கோப்பை போட்டியில் கோப்பையை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற பெருமையை இத்தாலி பெற்றது.
ஏற்கெனவே, மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் கடந்த வாரம் இத்தாலி வாகை சூடியதால், இந்த ஆண்டு இத்தாலிக்கு இரட்டை சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது.