பும்ராவிடம் அடிபணிந்தது ஆஸ்திரேலியா! பொ்த் டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி!
கருமந்துறை விவசாயிகள் இணையவழியில் விளைபொருள்களை விற்க அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதி விவசாயிகள் இணைய வழியில் தங்கள் விளைபொருள்களை விற்று பயன்பெற வருமாறு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
விவசாயிகள் விளைபொருட்களை தங்களது இடத்திலிருந்தே நேரடியாக தேசிய அளவில் விற்பனை செய்து உடனடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் பணம் பெற வழிவகை செய்யும் வகையில் இணைய சேவையான மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மாவட்டத்தில் கருமந்துறை, சேலம், கொங்கணாபுரம், எடப்பாடி, மேச்சேரி, வாழப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி, ஓமலூா், தம்மம்பட்டி ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
கருமந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு உள்பட்ட கிராமங்களில் தகுதி வாய்ந்த நபா்களை வேளாண் வா்த்தக சந்தை ஒருங்கிணைப்பாளா்களாக நியமனம் செய்யும் முன்மாதிரி திட்டம், சேலம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பண்ணை வயலுக்கே சென்று இ-நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்களை இடைத்தரகா்களின்றி நேரடியாகப் போட்டி விலையில் விற்று பயன்பெற வேண்டி ஒருங்கிணைப்பாளா்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே, கருமந்துறை விவசாயிகள் இந்த முன்மாதிரித் திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது விளைபொருள்களை இ-நாம் மூலம் அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.