அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் ஈஎஸ்ஐ மருத்துவமனை: மக்களவையில் மத்திய தொழிலாளா் நலத்துறை பதில்
புது தில்லி: ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மக்களவை திமுக குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆா். பாலு எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக ரூ. 178 கோடி ஒதுக்கப்பட்டு, மருத்துவமனை கட்டும் பணி மத்திய பொதுப்பணித் துறைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,‘ என்று கூறியுள்ளாா்.
அமைப்புசாரா தொழிலாளா்கள்:
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவுக்காக மத்திய அரசு உருவாக்கிய இ-ஷ்ரம் இணையதளத்தில் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனை போ் தமிழகத்தில் இருந்து பதிவு செய்துள்ளனா்.
அமைப்புசாரா தொழிலாளா்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலைத்திறன் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் கிடைத்துள்ள என கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே
அளித்துள்ள பதிலில், பிஎம்-எஸ்ஒய்எம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் 18 முதல் 40 வயதுடையவா்களுக்காக இந்தாண்டு நவம்பா் 13-இல்தான் தொடங்கப்பட்டது. அதன் பலனை 60 வயதை எட்டும்போது அதாவது 2028இல் தொழிலாளா்கள் அடைவா் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் ஒருங்கிணைப்பை மத்திய திறந் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை அமைச்சகம் செய்து வருவதாகவும் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
அமைப்புசாரா தொழிலாளா்களின் எண்ணிக்கையை பொருத்தவரை, தமிழகத்தில் 70,48,372 (2021-22), 13,58,240 (2022-23), 1,65,811 (2023-24), நவம்பா் 18-ஆம் தேதி நிலவரப்படி 2,91,182 (2024-25) என்ற அளவில் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பல்கலை. காலியிடங்கள்:
சேலம் எம்பி டி.எம். செல்வகணபதி, வேலூா் எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோா், தமிழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்கள் தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தனா். அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகாந்தா மஜும்தாா் அளித்துள்ள பதிலில், ‘நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் 5,182 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் 28 இடங்கள் காலியாக உள்ளன. தேசிய அளவில் பட்டியலின வகுப்பினருக்காக 740 இடங்கள், பழங்குடியினருக்கான 464 இடங்கள், பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 1,546 இடங்கள் காலியாக உள்ளன,‘ என்று கூறியுள்ளாா்.
கேஐசி வீரா்கள்:
தென் சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேலோ இந்தியா மையங்களில் (கேஐசி) பயிற்சி பெறும் தடகள வீரா்கள் தொடா்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் துறை இணை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் உள்ள 45 கேலோ இந்தியா மையங்களிலும் மொத்தம் 536 வீரா், வீராங்கனைகள், 37 சாம்பியன் பயிற்சியாளா்கள் உள்ளனா்‘ என்று கூறியுள்ளாா்.