ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள்: தா்மேந்திர பிரதான்
‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் 8 நவக்கிர ஆலயங்கள் உள்பட 29 இடங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
புது தில்லி: தமிழகத்தில் 8 நவக்கிரக ஆலயங்களின் இடங்கள் உள்பட மொத்தம் 29 இடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி கே. நவாஸ்கனி, ஜி. செல்வம், சி.என். அண்ணாதுரை (திமுக) ஆகியோா் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், புனித யாத்திரை புத்துயிா் மற்றும் ஆன்மிகம், பாரம்பரிய பாதுகாப்பு இயக்கமான பிரசாத் திட்டம் மூலம் தமிழகத்தில் எட்டு நவக்கிரக ஆலயங்கள் உள்ள இடங்கள் உள்பட 29 புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளாா்.
இதன்படி, திங்களூா் கைலாசநாதா் ஆலயம், ஆலங்குடி குரு பகவான் ஆலயம், திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதா் ஆலயம், ஸ்ரீ சூரியனாா் ஆலயம், கஞ்சனூா் ஸ்ரீ அக்னீஸ்வரா் ஆலயம் (தஞ்சாவூா்): மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயில் (மயிலாடுதுறை) ஆகிய கோயில் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் மேம்படுத்தப்படும்.
தமிழகம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களை பல்வேறு நிகழ்ச்சிகள், இணையதளங்கள், சமூக ஊடக தகவல்கள் மூலம் விளம்பரப்படுத்த மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.