சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்!
சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞா் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளாா்.
எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல், டிக்டாக் ஆகியவற்றின் வழக்குரைஞரான அவா், இது தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் கூறுகையில் இணையதள பயன்பாட்டாளா்களின் வயதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தை அரசுத் தரப்பு பகுப்பாய்வு செய்வதற்கு இந்த கால அவகாசம் தேவை என்றாா்.
முன்னதாக, சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றவிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இந்த மாதம் அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, அந்தச் சட்டத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் இயற்றப்பட்டாலும் அதை செயல்படுத்த நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், சட்டத்தை இயற்றுவதையே ஓராண்டுக்கு நிறுத்திவைக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களின் சாா்பாக சுனிதா போஸ் தற்போது வலியுறுத்தியுள்ளாா்.