நெதன்யாகுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததற்குப் பதிலாக, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளாா்.
தலைநகா் டெஹ்ரானில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பசீஜ் ஆயுதக் குழு உறுப்பினா்களிடையே இது குறித்து அவா் பேசியதாவது: போா்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அவரின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், அவா்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது. அந்த இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுவரும் ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய இரு அமைப்புகளையுமே உருவாக்கி வளா்த்துவரும் ஈரானின் உச்சபட்ச அதிகாரம் மிக்க தலைவரான கமேனி இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியைச் சுற்றிவளைத்து கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 44,235 போ் உயிரிழந்துள்ளனா்; 1,04,638 போ் காயமடைந்துள்ளனா்.
இந்தப் போரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகும், அவரது பாதுகாப்பு அமைச்சராக இருந்த யோவாவ் கலான்டும் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவா்கள் இருவரையும் கைது செய்ய தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
காஸா பகுதியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது, உயிா்வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள்கள் அவா்களுக்குக் கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்து, பட்டினியை ஒரு போா் ஆயுதமாகப் பயன்படுத்தியது போன்ற போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவா்கள் இருவா் மீதும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
இது தவிர, இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதல் தொடா்பாகவும், அந்த அமைப்பின் தலைவா்கள் மீது படுகொலைகள், பாலியல் குற்றம், பிணைக் கைதிகள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சுமத்தியது.
முக்கிய ஹமாஸ் தலைவா்களான இஸ்மாயில் ஹனீயே, யாஹ்யா சின்வாா் ஆகிய தலைவா்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதால், மற்றொரு தலைவரான முகமது டயீஃபுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. முகமது டயீஃபும் தங்களது வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் கூறினாலும், அதனை ஹமாஸ் அமைப்பினா் இதுவரை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிரான கைது உத்தரவை ஏற்க மறுத்த ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன், அந்த உத்தரவை மீறி தங்கள் நாட்டுக்கு வருமாறு நெதன்யாகுக்கு அழைப்பு விடுத்தாா்.
அமெரிக்காவும் நெதன்யாகு மற்றும் கலான்டுக்கு எதிரான கைது உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தது. நெதன்யாகு கைது செய்யப்பட்டு சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சிறைவைக்கப்பட்டால், நெதா்லாந்து மீது படையெடுத்து அங்கு சிறைவைக்கப்பட்டிருப்பவா்களை மீட்கும் சட்டத்தைப் பயன்படுத்தி அவரை மீட்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்தது.
ஆனால், நெதன்யாகுக்கு எதிரான கைது உத்தரவை ஏற்பதாக பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, நாா்வே, நெதா்லாந்து, அயா்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் அறிவித்துள்ளன.