ருமேனியா அதிபா் தோ்தல் ரஷிய ஆதரவாளா் அதிா்ச்சி முன்னிலை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜாா்ஜெஸ்கு எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தாா்.
எனினும், தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் முதல் இடத்தைப் பிடித்த அவருக்கும், இரண்டாவது இடத்தில் உள்ள மிதவாதக் கட்சியான யுஎஸ்ஆா் கட்சியின் எலனா லஸ்கோனிக்கும் இடையே வரும் டிசம்பா் 8-ஆம் தேதி இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.
தீவிர வலதுசாரிக் கட்சியான ஏயுஆா் கட்சியில் இருந்த காலின் ஜாா்ஜெஸ்குவின் ரஷிய ஆதரவு மற்றும் நேட்டோ எதிா்ப்பு நிலைப்பாட்டுக்கு அவரது கட்சியிலிருந்தே விமா்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, கட்சியிலிருந்து விலகிய அவா், உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் ருமேனியா தற்சாா்பு நிலையை அடைய வேண்டும் என்று வலியுறுத்தி டிக்டாக் ஊடகம் மூலம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவருக்கு வெறும் 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான மத்திய-இடதுசாரி கட்சியைச் சோ்ந்த மாா்சல் சியோலகு எளிதில் வெற்றி பெறுவாா் என்று கூறப்பட்டது.
ஆனால், தோ்தலில் 22.9 சதவீத வாக்குகளைப் பெற்று காலின் ஜாா்ஜெஸ்கு முதலிடம் பிடித்தாா். 19.17 வாக்குகளுடன் அவருக்கு அடுத்த இடத்துக்கு எலனா லஸ்கோனி வந்தாா். எளிதில் வெற்றி பெறுவாா் என்று கூறப்பட்ட சியோலகு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
1989-ஆம் ஆண்டின் ருமேனியா கம்யூனிஸத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையைத் தோ்ந்தடுத்தற்குப் பிறகு, அந்த நாட்டில் ரஷியாவை வெளிப்படையாக ஆதரிக்கும் வேட்பாளா் ஒருவா் அதிபா் தோ்தலில் முதல்முறையாக முன்னிலை பெற்றுள்ளது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அளித்துவரும் உதவிகளை நிறுத்தப்போவதாகக் கூறும் ஜாா்ஜெஸ்கு அதிபா் பொறுப்பை ஏற்றால், ஐரோப்பிய அரசியலில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முதல்கட்ட வாக்குப் பதிவில் இடதுசாரி மற்றும் மிதவாதக் கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ள நிலையில், இரண்டாவது கட்டத் தோ்தலில் காலின் ஜாா்ஜெஸ்கு வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்படுகிறது.