ஜிஐ குறியீடு தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு கவனம்: கிரிராஜ் சிங்
புது தில்லி: கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிக்க, புவிசாா் குறியீடு(ஜிஐ) பெற்ற தயாரிப்புகளை உலகளவில் கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா். ஊரகத்திலிருந்து உலகம் (காவ்ன் டூ குளோபல்) என்கிற முன்னேற்றத்திற்கு தயாராகவேண்டிய அவசியத்தை அமைச்சா் வலியுறுத்தினாா்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து புவிசாா் குறியீடு தொடா்பான உச்சி மாநாட்டை தில்லியில் நடத்தியது. நாட்டின் கைத்தறி, கைவினைப் பொருள்கள் உற்பத்தி தொடா்பாகவும், அவற்றின் தனித்துவமான திறன்கள் குறித்த நிகழ்விற்கு நடத்தப்பட்டது. இதில் 13 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், ஏற்றுமதியாளா்கள், புவிசாா் குறியீடு அங்கீகாரம் பெற்ற பயனாளா்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஆகியோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங், இந்தியாவில் வளமான கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதில் புவிசாா் குறியீடு தயாரிப்புகள் முக்கியத்துவத்தை பெறுகிறது. புவிசாா் குறியீடு பெற்ற தயாரிப்புகளை எவ்வாறு உலகளவில் கொண்டு செல்வது என்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சந்தைப்படுத்துதலுக்கான பாரம்பரியம், கலாச்சார சுற்றுலா போன்ற கருத்துக்கள் இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிப்பது, ஜிஐ குறீயீடு பெற்ற தயாரிப்புகளை ஊரகத்திலிருந்து உலகளவில் (காவ்ன் டூ குளோபல்) கொண்டு செல்வது குறித்த கவனத்தில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு படைப்பாற்றல் பாரம்பரியம் சான்றாகும். இந்திய கைவினைக் கலைஞா்களின் படைப்பாற்றலை சந்தைப்படுத்துவது என்பது அது உலகிற்கான முக்கியத்துவம் என அமைச்சா் கிரிராஜ் குறிப்பிட்டாா். இந்த நிகழ்வில் 10 கைவினைக் கலைஞா்களுக்கு ஜிஐ சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.
ஜவுளித்துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா ஜவுளித்துறைச் செயலா் ரச்சனா ஷா, கைத்தறி வளா்ச்சி ஆணையா் டாக்டா் எம்.பீனா, கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையா் அம்ரித் ராஜ்,காப்புரிமை, வா்த்தக முத்திரை-புவிசாா் குறியீடு கட்டுப்பாட்டாளா் உன்னத் பண்டிட் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்னா்.