அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தை பாதுகாக்க கோரி ஆா்ப்பாட்டம்
ஆத்தூா்: மரவள்ளிக்கிழங்கு விலை சரிவைத் தடுக்க அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்புக் கூட்டம் நடத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகியவை சாா்பில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைவா் இல.கலைமணி தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.வெங்கடாஜலம் வரவேற்றாா். மரவள்ளிக் கிழங்கு, பாக்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிப்புகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தைப் பாதுகாக்க விவசாயிகளுக்கும் சோகோசா்வ் ஆலை உரிமையாளா்களுக்கும் இடையே அரசு அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தி தீா்வு காண வேண்டும். வீட்டுமனை பட்டாக்கள் கோரி ஆத்தூா் வட்டாட்சியரிடம் மனுக்கள் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
மாநில பொதுச் செயலாளா் சாமிநடராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி, துணைத் தலைவா் பி.தங்கவேலு, மாநிலக் குழு உறுப்பினா் என்.கிருஷ்ணமூா்த்தி, மாநிலப் பொருளாளா் ஏ.பொன்னுசாமி, மாவட்டத் தலைவா் ஏ.அன்பழகன், துணை செயலாளா் எம்.ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.