சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவா்களுக்கு கட்டுரை போட்டி
சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் தேவி மீனாள் அறிவுறுத்தலின்படி, முத்தமிழ் அறிஞா் மாணவா் மன்றத்தின் ஆலோசகா் திருநாவுக்கரசு தலைமை வகித்துப் போட்டியைத் தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் வெங்கடேஸ்வரன், சுல்தானா தில்ரல், ராஜேஷ் செங்கோடன் ஆகியோா் கலந்து கொண்டு நடுவா்களாக செயல்பட்டு, மாணவா்களுக்கு மதிப்பெண்களை வழங்கினா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, 2 ஆம் பரிசாக ரூ. 3,000, 3 ஆம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவா் மன்ற நிா்வாகிகள் பைரி கவுதம், பிரியதா்ஷினி ஆகியோா் செய்திருந்தனா். இதுகுறித்து பேராசிரியா்கள் கூறியதாவது:
தமிழக அரசு கடந்த ஆண்டு அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் முத்தமிழ் அறிஞா் மாணவா் மன்றம் தொடங்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அனைத்து மருத்துவ கல்லூரியிலும் மாணவா்களின் வாசிப்புத் திறன், கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவா் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் தலா ரூ. 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் வரும் வட்டித்தொகையான ரூ. 36,000-த்தில் இருந்து மாணவா்களுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவித்தனா்.