அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மேட்டூா்: 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில், மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவா் வில்சன் தலைமை வகித்தாா். தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 4 மணி நேரம் வேலைக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும், மேட்டூா் சாா் ஆட்சியா் தலைமையில் மாதம் ஒரு முறையும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின்போது சமையல் எரிவாயு அடுப்பு, சமையல் பாத்திரம், பாய், தலையணை ஆகியவற்றை சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாா் ஆட்சியா் பொன்மணி, வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எதிா்வரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.