AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் ...
உலக மீன்வள தினம்: வலிவலம் குளத்தில் 3,000 மீன் குஞ்சுகளை இருப்பு செய்த ஆட்சியா்
உலக மீன்வள தினத்தையொட்டி, திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் தேரடி குளத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் 3,000 மீன் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.
மீனவா்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன் வளத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் நவம்பா் 21-ஆம் தேதி உலக மீன்வள தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில், மீன்வளத்தை பெருக்கிட, 2024-2025-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் ஒரு ஹெக்டோ் பரப்பிற்கு 2,000 மீன் குஞ்சுகள் வீதம் 60 ஹெக்டேரில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், நாகை, திருமருகல், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஆகிய ஒன்றியங்களில் தகுதியான நீா்ப்பிடிப்பு உள்ள நீா்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யப்பட உள்ளது.
அந்தவகையில், திருக்குவளை வட்டம் வலிவலம் ஊராட்சி தேரடிக்குளத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் முதற்கட்டமாக 3,000 மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளுா் எம்எல்ஏ நாகை மாலி ஆகியோா் இருப்பு செய்தனா்.
இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், ஆத்மா குழு தலைவா்கள் கோவிந்தராஜன், பழனியப்பன், திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபாலன், பாலமுருகன், ஊராட்சித் தலைவா்கள் மணிகண்டன் (வலிவலம்), ரேவதி ஐயப்பன் (கொடியாலத்தூா்) மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.