வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா்.
திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளாா். அவா் கடந்த 18.4.2016 அன்று திருப்பூா் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட கூடுதல் சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் 20.9.2023-இல் தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், 12,52,400 ரூபாயை கருப்பையா குடும்பத்தாருக்கு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி நந்தினி தீா்ப்பளித்தாா்.
ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவா் தரப்பில் 2024-இல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப்பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.