A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை ...
விமானம் வேதகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது: உ.பி. கவர்னர் பேச்சு!
நவீன கால விமானப் போக்குவரத்து நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே வேதகாலத்தில் விமானத்திற்கான யோசனை கண்டுபிடிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் லக்னௌவில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி மொழி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டார்.
அங்கு பேசிய அவர், “பண்டைக்கால இந்தியாவில் முனிவர்களும் அறிஞர்களும் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகள் தற்போது உலகத்தில் எல்லோருக்கும் பயன்பட்டு வருகின்றன.
வேதகால முனிவர் பரத்வாஜ் விமானம் குறித்த யோசனையை முன்வைத்தார். ஆனால், அதன் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டது, தற்போது அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரூ. 100 கோடி இணைய மோசடி: சீனாவைச் சேர்ந்த நபர் தில்லியில் கைது!
ராமாயணத்தில் வரும் ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பெரிய தொழில்நுட்ப வல்லுநர். எல்லோரும் சொல்வார்கள், கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று. ஆனால், அது உண்மையல்ல.
கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்து, தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை உருவாக்கி வந்தார். நாட்டில் இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக ராவணன் அவரை ரகசியமாக வைத்திருந்தார். ராவணன் எந்த விமானத்தில் சீதையைக் கடத்தி சென்றார் என்பது குறித்து உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் பேசினார்.
மேலும் பேசிய ஆனந்திபென் படேல், முன்னோர்களால் செய்யப்பட்ட ஈடு இணையற்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ந்து தெரிந்துகொள்ள மாணவர்களைத் ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை வலியுறுத்தினார்.
ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் மற்றும் வில்பர் ரைட், டிசம்பர் 17, 1903 அன்று அமெரிக்காவின் வட கரோலினாவில் முதன்முதலில் சுயமாக இயக்கப்படும் விமானத்தை பறக்கவிட்டவர்கள்.
ஆனால், சில பாஜக தலைவர்கள் விமானத்திற்கான யோசனை ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள புஷ்பக விமானத்தின் மாதிரியைக் கொண்டே உருவானதாக விவாதித்து வந்துள்ளனர்.