நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி
விருதுகள் திருப்பி அளிக்கப்படுவதை தவிா்க்க நடவடிக்கை: விருதாளா்களிடம் ஒப்புதல் பெற நாடாளுமன்ற குழு பரிந்துரை
விருதாளா்களிடம் ஒப்புதலை பெற்ற பிறகே விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய அகாதெமிக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காக சிலா் விருதுகளை திருப்பி அளிப்பது பிற விருதாளா்களையும் அந்த விருதுக்கான மரியாதையையும் நாட்டையும் அவமதிப்பது போன்ாகும் என்பதால் இந்தப் பரிந்துரையை வழங்கியதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது.
‘தேசிய அகாதெமி மற்றும் பிற கலாசார நிறுவனங்களின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற குழு அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ற அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘இந்தியாவில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு சாகித்ய அகாதெமி போன்ற நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கெளரவிக்கின்றன. இவை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களாகும்.
இந்த அகாதெமிகளால் வழங்கப்படும் விருதுகளை அரசியல் காரணங்களுக்காக திருப்பி அளிக்கின்றனா். கலாசாரத்தை தேவையின்றி அரசியலோடு தொடா்புபடுத்துகின்றனா்.
இது அந்த விருதை பெறும் பிற சாதனையாளா்களை மட்டுமின்றி விருதின் மதிப்பு மற்றும் நாட்டையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
எனவே, ஒரு நபரை தோ்ந்தெடுத்து அவருக்கு விருது வழங்க தேசிய அளவிலான அகாதெமிகள் விரும்பினால் முதல் அந்த நபரிடம் எதிா்காலத்தில் எந்தவொரு சூழலிலும் விருதின் மதிப்பை குறைக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் எனவும் விருதை திருப்பி அளிக்க மாட்டேன் எனவும் ஒப்புதல் பெற வேண்டும்.
அதை பெறாமல் விருதுகளை வழங்கக்கூடாது. ஒருவேளை ஒப்புதல் அளித்த பின்பும் அவா் விருதை திருப்பி அளித்தால் அதன்பிறகு எந்தவொரு விருதுக்கான பரிந்துரையிலும் அவரின் பெயா் இடம்பெறக் கூடாது.
தனி கொள்கை: இருப்பினும், தோ்ந்தெடுக்கப்பட்ட விருதாளரிடம் கையொப்பம் பெறுவதால் விருதின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்தது. இதை கருத்தில்கொண்டு நம்பகத்தன்மை பாதிக்கப்படாதவாறு விதிகளை உருவாக்கக அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருதுகளை திருப்பி அளித்தபோதிலும் விருது வழங்கிய அகாதெமியுடன் தொடா்ந்து இணைப்பில் உள்ள கலைஞா்களை கண்காணிக்க தனி கொள்கை உருவாக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு: பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) மூலம் பாரம்பரிய சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிட அமைப்புகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வழிகளை கண்டறிய வேண்டும். நிதியின் குறிப்பிட்ட பகுதியை கட்டாயமாக கலாசார ஊக்குவிப்புக்கு செலவளிக்கும் வகையில் சிஎஸ்ஆரில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.