விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, விளம்பர பதாகைகளை வைத்திருப்போா் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புயல் மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் கிரேன்களையும், உயா்ந்த இடத்தில் உபகரணங்களையும் வைத்திருக்கலாம். கடுமையான காற்றின் காரணமாக அவை அசைவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இதனைத் தவிா்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும். அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும்.
விளம்பர பதாகைகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும். புயல் காற்றால் விளம்பர பதாகைகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.