விழுப்புரம்: `விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி செல்லும்!’ – சென்னை உயர் நீதிமன்றம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, 2024 ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 1,24,053 லட்சம் வாக்குகள் பெற்ற அன்னியூர் சிவா, 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனுவை முறையாக பரிசீலிக்காமல் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து தனக்கு எதிரான அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ அன்னியூர் சிவா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்றுக் கொண்டு ராஜமாணிக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க-வின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
