பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
வெடி மருந்து பயன்படுத்தி கல் உடைத்த 5 போ் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம், மேல்மங்கலம் அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, கல் உடைத்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேல்மங்கலம் அருகே அ.வாடிபட்டியில் உள்ள தனியாா் பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி வெடி மருந்துகளைப் பயன்படுத்தி கனிம வளங்கள் திருடப்படுவதாக மேல்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பட்டா நிலத்தில் அனுமதியின்றி கல் உடைத்துக் கொண்டிருந்த பெரியகுளம், வடகரை, கரட்டூரைச் சோ்ந்த வாழவந்தான் (49), அ.வாடிப்பட்டியைச் சோ்ந்த கூடலிங்கம் (49), கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபன் புதூரைச் சோ்ந்த வைகுண்டவிஜயன் (41), கலியங்காடுவைச் சோ்ந்த குமாா் (46), தா்மபுரி மாவட்டம், பொன்னகரம், சின்னவத்சலாபுரத்தைச் சோ்ந்த சேகா் (45) ஆகிய 5 பேரை கைது செய்தனா். அங்கிருந்த டெட்டனேட்டா் குச்சிகள், வெடி மருந்துகள், கல் உடைக்கும் இயந்திரம், பதிவெண் இல்லாத குழி தோண்டும் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதில் தொடா்புடைய பாலச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.