வேதாரண்யத்தில் கனமழை: விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி!
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை நீடித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை தொடங்கிப் பலத்த இடியுடன் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோடியக்கரையில் பகல் 12 மணி நிலவரப்படி கடந்த 3 மணி நேரத்தில் 143 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. கடலோர கிராமங்களில் கனமழை கொட்டி வருகிறது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்தைப் பாதிக்கும் அளவில் காணப்படுகிறது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள தரைப் பாலங்கள் மூழ்கடிக்கப்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்தபடி அவதியுற்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு தாமதமாக வெளியானதால் அந்த அறிவிப்பு பயனற்று போனது. பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைக்க முடியாமல் பள்ளி நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.