வேலைவாய்ப்பு முகாம்களில் பணி அமா்த்தும் முன்பே பதிவு மூப்பை ரத்து செய்யக் கூடாது
வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணியில் அமா்த்தும் முன்பே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பை நீக்கக் கூடாது என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: சில்லறை வியாபாரிகளைப் பாதிக்கும் வகையில் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள காா்ப்பரேட் நிறுவனங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தும்போது, பணி நியமனம் செய்வதற்கு முன்பே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பை ரத்து செய்வதைக் கைவிட வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் பணி வழங்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரும் டிச. 8- ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கியில் பெருமன்றத்தின் மாவட்ட மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவடடத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவா் கு. ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் மு. கைலாசபாண்டியன், தேசியக் குழு உறுப்பினா் பவிதாரணி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.