``வைகை ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுகள்; அதிகரிக்கும் நீர் மாசுபாடு'' - எச்சரிக்கும் சூழல் ஆய்வு!
வைகை ஆற்றில் 10 நாள்கள் ஆய்வு..
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த இரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு வைகை ஆற்றின் பல்லுயிரிகள், பண்பாட்டுச் சின்னங்கள், கழிவுநீர் கலப்பிடங்கள் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்து, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளனர்.
வைகை ஆற்றின் தாவர மற்றும் பல்லுயிரிய சூழலின் நிலை, நகரமய விரிவாக்கம் வைகை ஆற்றின் மீது ஏற்படுத்திய தாக்கம், வைகை ஆற்றின் மணல் பரப்பின் நிலை, அதில் கலக்கும் கழிவு நீர், வைகை ஆற்றின் நீரின் தன்மை மற்றும் தரம் உள்ளிட்டவைகளை இந்த ஆய்வில் நாம் காணலாம்.
57 வகையான தாவரங்கள்..
இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் சூழலியல் ஆய்வாளர் ஆன தமிழ் தாசன் கூறியதாவது: "என்னுடன் சேர்ந்து நால்வர் கொண்ட குழு இந்த வைகை ஆற்றின் சூழல் குறித்து பத்து நாள்கள் ஆய்வு செய்தோம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் வைகை ஆற்றினுடைய பல தகவல்களை அறிந்தோம். மூல வைகையின் அடர்ந்த வனப்பகுதியில் ஆற்று நீர் நாய்கள் வாழுகின்றன. மேலும் மான்கள், கீரிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வைகை ஆற்றை வாழிடமாகவோ கொண்டுள்ளன என்பதை ஆவணம் செய்துள்ளோம். வைகை ஆற்றங்கரையில் 57 வகையான தாவரங்களை ஆவணம் செய்தோம். அதில் 45 வகை மரங்கள் 6 வகை செடிகள் 3 வகை குடிகள் 4 வகை பொருள்கள் 2 வகை நீர் தாவரங்கள் 4 வகை காட்டு தாவரங்கள் அடங்கும்.
நீர் மாசுபாடு அதிகரிப்பு..!
மரங்கள் சூழ்ந்த வைகை ஆற்றங்கரை இன்று வெட்ட வெளியாக குடியிருப்புகளாக பாசன பரப்புகளாக மாறிவிட்டன. மதுரை மாநகரில் வைகையின் இரு கரையில் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் வைகை ஆற்றங்கரையில் மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் மட்டுமே காணப்படும் காருவி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. மாசுபட்ட நீரில் வளரக்கூடிய சம்பை புல்லும் ஆகாய தாமரை செடியும் பரவலாக மதுரை நகரில் காணப்படுகிறது. இத்தாவரங்களின் பரவல் மதுரை மாநகரில் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக விளங்குகின்றன.
நாமக்கோழி, அரிவாள் மூக்கன் அதிகரிப்பு..!
மேலும் வைகை ஆற்றில் 175 வகை பறவைகளை ஆவணம் செய்தோம். அதில் 125 வகை பறவைகள் வாழிட பறவைகள் ஆகும். 50 வகை வலசை பறவைகளும் ஆவணம் செய்துள்ளோம். கழிவுநீரில் உள்ள தாவரங்களை, புழுக்களை, பூச்சிகளை உண்டும் வாழும் இயல்புடைய நாமக்கோழி அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை மதுரை மாநகரில் பாயும் வைகை ஆற்றில் அதிகரித்து வருகின்றன. இவை ஆற்றின் நீரின் மாசுபாடு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். வைகை ஆற்றில் 58 வகையான நன்னீர் மீன்கள் ஆவணம் செய்துள்ளோம். அதில் 11 வகை மீன்கள் அயல்வகை மீன்கள் ஆகும்.
ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவு..!
அதுமட்டுமின்றி மதுரை மாநகர் எங்கும் வைகை ஆற்றில் வெண் மணல் பரப்பு காண முடியவில்லை, மணல் குவாரிகள் மூலம் ஆற்று மணல் எடுக்கப்பட்டுவிட்டது.
தேனி மாவட்டம் வாலிப்பாறை முதல் ராம்நாடு மாவட்டம் ஆற்றங்கரை வரை சுமார் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகை ஆற்றுக்குள் கழிவு நேரடியாக கலப்பதை ஆவணம் செய்தோம். அதில் மதுரையில் 54 இடங்களில் இருந்து வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.
குடிநீர், குளியல் நீர், கால்நடைக்கான குடிநீர், பல்லுயிரிகளுக்கான வாழ்வாதார நீர், சலவை நீர், பாசன நீர், நன்னீர் போன்ற பல பயன்பாடுகளை கொண்ட வைகை ஆற்று நீரின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். எனவே வைகை ஆற்றின் உயிர்ச்சூழல் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆறு சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.