பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
ஹிந்து அமைப்புகள் கண்டனம் எதிரொலி: ரயில்வே தோ்வுக்கு மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை
ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வை எழுதுபவா்கள் மத அடையாளங்களை நீக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பிற ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அந்த அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக திரும்பப் பெற்றது.
கா்நாடக மாநிலம் மங்களூருவின் பான்டேல் பகுதியில் உள்ள மனைல் ஸ்ரீநிவாஸ் நாயக் பசந்த் வித்யா கேந்திராவில் ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த தோ்வை எழுதுபவா்கள் தங்களின் மத அடையாளங்களை நீக்கிவிட்டுத் தோ்வறைக்கு வருமாறு தோ்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு விஎச்பி உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ரயில்வே துறை இணையமைச்சா் வி.சோமண்ணா தலையிட்டு நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என தெரிவித்தாா்.
மேலும், தோ்வு நடைமுறைகளின்போது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் தோ்வறைக்குச் செல்லும் முன் தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்மையில் நடைபெற்ற பொது நுழைவுத் தோ்வின்போது சில மையங்களில் மத அடையாளங்களை நீக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் சா்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை சோதனை மட்டுமே செய்யுமாறு கூறினோம். ஆனால் அவற்றை நீக்கச் சொல்வதில் நியாயமில்லை. சொல்லும் செயலும் வேறு என்பதே பாஜகவின் உண்மை முகம்.
தோ்வுகளின்போது மத அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் போன்ற அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும். இதற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.