செய்திகள் :

10, 20 வருடங்கள் தீபாவளி ஃப்ளாஷ்பேக்: சினிமா கொட்டகை, கோழிச் சோறு, மருதாணி, மாட்டுவண்டி அனுபவங்கள்!

post image

தீபாவளி என்றாலே  கொண்டாட்டம்தான். கொண்டாட்டம் என்றாலே சந்தோஷம்தான். கொஞ்சம் ரீவைண்ட் செய்தால்... கடந்த 10, 20 வருடங்களுக்கு முன் இருந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தன என்பதைச் சொல்கிறார்கள் இவர்கள்...

தீபாவளி பலகாரங்கள்
தீபாவளி பலகாரங்கள்

ஜெயலட்சுமி, தங்கச்சிமடம்

‘‘பாட்டி, தாத்தா, சித்தப்பா, பெரியப்பானு எல்லாரும் வீடு நிறைஞ்சு இருப்போம். தீபாவளிக்கு ஒரு 15 நாளைக்கு முன்னாடியே அதிரசத்துக்கு உரல்ல மாவிடுச்சு, பலகாரம் சுட்டுடுவோம். தீபாவளிக்கு முதல் நாள் அக்கா, நான், தம்பினு மூணு பேரும் ஆட்டுக்கல்ல மாவு அரைப்போம். அந்தக் காலத்துல இட்லி, தோசையெல்லாம் தீபாவளிக்கு மட்டும்தான்.

வயசுப் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து தோட்டத்துக்கு போய் மருதாணி பறிச்சிட்டு வருவோம். அந்த மருதாணியோட ஏழு வீட்டுக் கூரை எடுத்து, புளி, கிராம்பு சேர்த்து அம்மியில அரைச்சா... நல்லா செவக்கும்னு நம்பி அப்டி செய்வோம். நைட்டு எல்லாரும் ரவுண்டா உக்காந்து மருதாணி வெச்சிக்குவோம்.

காலையில் நாலு மணிக்கு எழுந்திரிச்சு, சாணி தெளிச்சு, பெரிய கோலமா போடுவோம். யார் கோலம் நல்லா இருக்குனு, தெருவுல ஒவ்வொரு வீடா போயிப் பார்ப்போம். வயசுப் புள்ளைங்க, வெளிச்சம் வர்றதுக்கு முன்னால வீட்டுக்குள்ள போயிடணும்.

நல்லா எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிட்டு, புது டிரெஸ், செஞ்ச பலகாரத்தை எல்லாம் சாமி முன்னாடி வைப்பாங்க. வெள்ளமும் வேப்பிலையும் நச்சு, அதைத்தான் முதல்ல தருவாங்க. ஏன்னு கேட்டா, வாழ்க்கையில வர்ற இன்பத்தையும் துன்பத்தையும் சேர்த்தே ஏத்துக்குற பக்குவம் இப்போல இருந்தே வரணும்னு சொல்லுவாங்க.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

மதிய சாப்பாட்டுக்குச் சமைக்க, வீட்டுல நிக்குற ஒரு கோழியை விரட்டிப் பிடிக்கணும். அதுக்குள்ள நாங்க ஒரு வழி ஆகிடுவோம். அப்புறம் கோழியை உரிச்சு, அம்மியில மசாலா அரைச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு.... அவ்ளோ சந்தோஷமா இருக்கும். சாயங்கால நேரத்துல பக்கத்து வீடுகளோட, ‘நீங்க என்ன சமைச்சீங்க? என்னென்ன பலகாரம் சுட்டீங்க?’னு கதை பேசுவோம்.

டிடி சேனல்ல போடுற தீபாவளி சிறப்புத் திரைப்படத்தை பார்த்துட்டு, அடுத்த நாள் ஸ்கூல்ல அந்தப் படத்தை பத்தி கதை கதையா பேசுவோம்!”

விஜயா, சேலம்

’’தீபாவளினாலே... கடைக்குப் போற சந்தோஷம்தான். குடும்பத்துல எல்லாருமா சேர்ந்து கடைக்குப் போயி புது டிரெஸ் வாங்குற சந்தோஷமே தனிதான். வருஷத்துல ஒரு தடவை, தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரெஸ் எடுப்போம்.

அப்புறம், வருஷம் முழுக்க ஏதாச்சும் விசேஷத்துக்கு அதைப் போடும்போது எல்லாம் ‘தீபாவளி டிரெஸ் போடப்போறேன்’, ‘தீபாவளி டிரெஸ் போட்டிருக்கேன்’னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக்குவோம்.

விஜயா
விஜயா

ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கும்போது, ரொம்ப திருப்தியா இருக்கும். ஆடைகள், பட்டாசு, பரிசு, பலகாரம், போனஸ்னு எல்லா செலவுகளும் சேர்ந்து பெருமூச்சுவிட விட்டாலும், யாருக்கும் அது பத்தின் குறையோ, கோபமோ இருக்காது.

வருஷம் முழுக்க உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். வருஷத்துல ஒரு நாள் செலவழிச்சிட்டுப் போவோம்னுதான் நெனைப்பாங்க!”

விஜயஸ், திருச்செங்கோடு

‘‘தீபாவளி வரப்போகுதுனா அம்மா, யார் யாருக்கு இனிப்புக் கொடுக்கணும்னு லிஸ்ட் எழுத ஆரம்பிச்சிடுவாங்க.
எங்க குடும்பத்துல எல்லாருக்கும், அவங்களுக்கு வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் பத்தி ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல சில விஷயங்கள் தீபாவளிக்கு நிறைவேறும்.

விஜயஸ், திருச்செங்கோடு
விஜயஸ், திருச்செங்கோடு

தீபாவளி அன்னைக்கு நைட் குடும்பத்தோட ஹோட்டலுக்குப் போவோம். அது அவ்ளோ மகிழ்ச்சியா இருக்கும். கூடவே, தீபாவளி மாசத்துல குடும்பத்தோட ஒரு சின்ன டிரிப்பும் போவோம். தீபாவளி மாச செலவுகளுக்காக சில மாசங்கள் முன்பிருந்தே பணத்தை சேர்த்துவைக்க ஆரம்பிசிடுவோம்!”

பேபி, சேலம்

’’லட்டு, மைசூர்பாக், காரம்னு ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு நானே வீட்டுல எல்லாம் பண்ணுவேன். அதோட, தீபாவளி மாசத்துல வீட்டுத் தேவையான சில பாத்திரங்கள் எல்லாம் வாங்குவேன். கடைக்குப் போய், கூட்டத்துல முண்டியடிச்சு வாங்குற சந்தோஷமே தனி.

பேபி, சேலம்
பேபி, சேலம்

தீபாவளிக்கு சினிமா பார்க்கப் போறது ரொம்ப பரவசமா இருக்கும். ஒவ்வொரு வருஷமும் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒரு தனி கொண்டாட்டம்தான். அடுத்த ஆறு மாசத்துக்கு அந்தப் படப் பாடல்கள்தான் விசேஷ வீட்டு ஸ்பீக்கர்ல இருந்து டீக்கடை வரை எங்கயும் ஒலிச்சுட்டே இருக்கும்.

சிவா செல்வ மாரிமுத்து

‘’அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி... மேல்தட்டு மக்களுக்குத்தான் தீபாவளி முழுமையான கொண்டாட்டம். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு திண்டாட்டத்துடன் கூடிய கொண்டாட்டம்தான் தீபாவளி. சிலரை கடன்லயும் தள்ளிடும்.

சிவா செல்வமாரிமுத்து
சிவா செல்வமாரிமுத்து

என்னதான் செலவுகள் போட்டுப் புரட்டினாலும், நல்ல நாள்ல பிடிச்சதை சாப்பிடுறது, புது டிரெஸ் போடுறது, பட்டாசு வெடிக்கிறது, உறவுகளோட கூடுறதுனு பண்டிகைகள் நம்ம வாழ்க்கைக்கு ஒரு ரீஸ்டார்ட் பட்டன்தான் எப்பவும்!”

பாண்டியன், திருப்பத்தூர்

“அப்போவெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சோறு, மத்த ரெண்டு வேளைக்குக் கூழுக் கஞ்சினுதான் குடிப்போம். இட்லி, தோசை, கறிச் சோறு எல்லாம் தீபாவளிக்குத்தான். தீபாவளிக்கு பத்து நாளுக்கு முன்னால நெல்லுக் குத்த ஆரம்பிச்சிடுவோம். அதிரசம், முறுக்கு செய்யுற அந்த வாசனையிலேயே தீபாவளி ஆரம்பிச்சிடும்.

எடுத்த புதுத்துணியை டெய்லர் கடையில கொடுத்துட்டு, ‘எப்போ தருவீங்க?’னு காத்துக்கிறக்குற சுகமே தனிதான். அப்போ எங்கப்பா வெளியூர்ல வேலை பார்த்தாரு. ஊர்ல ஒரே ஒரு டெலிபோன் தான்  இருக்கும். அந்த வீட்டுக்கு எங்கப்பா போன் பண்ணுவாரு.

‘பாண்டியா, உனக்கு உங்க அப்பன் தீபாவளிக்கு ஊசி பட்டாசு வாங்குறதா... இல்ல  பொம்மை துப்பாக்கி வாங்கறதானு  கேட்க போன் பண்ணி இருக்கான்டா...’ அப்படீனு அந்த வீட்டுக்காரங்க கூப்பிடும்போது... துள்ளிக் குதிச்சு ஓடுவேன்.

பாண்டியன்
பாண்டியன்

புதுப்படம் பார்க்க மாட்டுவண்டியில ‘சினிமா கொட்டகை’க்குப் போவோம். அங்க சேர் எல்லாம் இருக்காது. மண் தரையில உக்காந்துதான் படம் பார்ப்போம். அவ்ளோ பரவசமா இருக்கும்.

இப்படி, தீபாவளிக்கு அந்தக் காலத்துல எல்லாரும் காத்துக் கிடந்ததுக்குக் காரணம்... பல நாள் ஏக்கங்களுக்கு விடியுற பண்டிகையா அது இருக்கும்!”

ஆம், காத்திருந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்கு... தித்திப்பு அதிகம்!

- கி.மெராக் ரியா, மிருதுளா, சி.த.இஷா, தி.ஜெகதீஸ்வரி

Madhumitha: ``தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான்'' - நினைவுகளைப் பகிரும் நடிகை மதுமிதா

தமிழ் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ஜனனி என்ற கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்திருந்தார். தற்போ... மேலும் பார்க்க

`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா-வின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோமதி பிரியா`சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை கோ... மேலும் பார்க்க

"ஒரு நண்பரைப் போல உணர வைத்தார்" - மம்மூட்டி குறித்து நடிகர் பாசில் ஜோசப் நெகிழ்ச்சி

திரையுலகில் பல ஆண்டுகளாக மெகாஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியை சந்தித்த நடிகரும், இயக்குநருமான பாசில் ஜோசப் தனது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த சந்திப்பின்போது மம்மூட்... மேலும் பார்க்க

நெருங்கும் தீபாவளி; சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் மக்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஊருக்குப் போக வேண்டும் ட்ரெயின் டிக்கெட் என்றைக்கு ஓப்பன் ஆகிறது எனத் தேடிப் பிடித்து டிக்கெட் எல்லாம் எடுத்து முடித்த பின்னர் நினைவுக்கு வருவது பட்டாசு தான்.... மேலும் பார்க்க

BiggBoss: 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர்; பிக் பாஸ் நிகழ்ச்சி உலகளவில் தொடங்கியதெப்படி?

aaaஉலக அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி பல்வேறு மனங்களில் இடம்பிடித்ததோ, அதேபோன்று தமிழக மக்களையும் இந்த நிகழ்ச்சி கவர்ந்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்க இருக... மேலும் பார்க்க